“ஒரே நாடு ஒரே சட்டம்” - ஜனாதிபதி செயலணியில் இணைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபை முஸ்லிம் சம்மேளனத்தின் பொருளாளர் பதவி மற்றும் உறுப்பினர் தகுதியிலிருந்தும் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்றொன்றை கொண்டு வருவதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த செயலணியில் 4 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.
முன்னால் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் தவிசாளராகவும், சிரேஷ்ட பிரதித் தலைவராக மிப்லால் மௌலவி என்பவரையும், மு.கா வின் முன்னால் பொதுச் செயலாளரான ஹஸன் அலியை செயலாளர் நாயகமாகவும் கொண்டு செயல்படும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் கலீலுர் ரஹ்மான் என்பவரும், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் காலி கிளை தலைவராக செயல்படும் மௌலவி மொஹமட் என்பவரும் உள்ளடங்குவதுடன் அஸீஸ் நிஸார்தீன் மற்றும் இன்திகாப் சுபர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த செயலணி முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதினால் அதில் இணைக்கப்பட்டுள்ள ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் தாமாக முன்வந்து பதவி விலகவில்லை என்பதாலும், சக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கியும் பதவி விலகாமை காரணமாக கொழும்பு மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொருளாளர் பதவி மற்றும் உறுப்பினர் உள்ளிட்டவற்றிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் நௌபர் மற்றும் ஷராப்தீன் ஆகியோர் ShortNews க்கு தெரிவித்தார்.