2022ம் ஆண்டுக்கான அக்குறணை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட அறிக்கை, சபையில் எந்தவித எதிர்ப்புகளும் இன்றி ஏகமனதான அங்கீகாரத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் நிகழ்த்திய விஷேட உரையில்,
"சர்வதேச அளவில் வியாபித்திருக்கும் கொரோனா அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையை ஒழுங்கான முறையில் சமர்ப்பிக்க கிடைத்ததை ஒரு அருளாகவே கருதுகிறேன்.
கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை; அதனால் நாட்டில் மூன்று மாதங்களுக்கு அதிகமான காலம் அமுலில் இருந்த பொது முடக்கம் ஆகிய காரணிகளினால் தடுப்பூசி வழங்குதல் உட்பட சுகாதார துறையில் ஏற்பட்ட எதிர்பாரா செலவீனங்கள், கல்வி அபிவிருத்தி, மற்றும் எதிர்பாரா உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக மேற்கொண்ட செலவவீனங்கள் என்பவற்றின் காரணமாக கடந்த வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்திருந்த இலக்குகளை அடைய முடியாமல் போயிருந்தது." என்பதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தொடந்து உரையாற்றுகையில் "கடந்த வருடம் தேசிய அளவில் ஒரு சவால் மிகுந்த வருடமாக இருந்த பொழுதிலும் பல துறைகளிலும் நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்த கௌரவ ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தினருக்கும், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ அவர்களுக்கும், அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
விசேடமாக இந்த 2021ம் ஆண்டில் என்னோடு உடன் நின்று ஒத்துழைத்த பிரதித் தவிசாளர் உட்பட சபையின் கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் அத்தனை பேருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது பிரதேச சபையை என்றும் சரியான இலக்கின் பால் இட்டுச் செல்வதற்கு உறுதியாக துணை நிற்கும் மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர், மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான துணை ஆணையாளர் உட்பட திணைக்களத்தில் உள்ள சகல உத்தியோகத்தர்களையும் நான் நன்றியுடன் நினைவு கூற ஆசைப்படுகிறேன்.
மேலும் அக்குறணை பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எம்மோடு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குகின்ற அக்குறணை பிரதேச செயலாளர் திருமதி குமாரி அபேசிங்ஹ, சுகாதார வைத்திய அதிகாரி சஞ்சீவ குருந்துகஹமட, அலவதுகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க உட்பட சகல உத்தியோகத்தர்கள், சர்வமத தலைவர்கள், மதஸ்தளங்களை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்கள், பிரதேசத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், நலன்புரி சங்கங்கள், தன்னார்வ உதவியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் நான் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்."
என்று அவரோடு ஒத்துழைத்தவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "நாம் தற்பொழுது வரைந்துள்ள வரவு செலவு திட்டத்தை சிறப்பான முறையில் அமுல் நடத்தி எமது பிரதேச சபையினை இலங்கையின் தலைசிறந்த உள்ளூராட்சி மன்றமாக மாற்றி அமைக்க அனைத்து தரப்பினரும் தங்களது பூரண ஆதரவுகளை தந்து பங்களிக்க வேண்டும் என்று நான் பணிவாய் வேண்டிக்கொள்கின்றேன்." என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிட்டத்தக்கது.