Our Feeds


Saturday, November 13, 2021

SHAHNI RAMEES

கொழும்பில் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நிலையம் சுற்றிவளைப்பு

 

(எம்.மனோசித்ரா)


கொழும்பு - கொம்பனித்தெரு பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.



வியாழக்கிழமை கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 


இதன்போது 32 வயதுடைய மருதானையைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சந்தேகநபரொருவரும், 42 வயதுடைய நாரஹேன்பிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஒவ்வொரு நபர்களிடமிருந்தும் தலா 12,000 ரூபாவைப் பெற்றுக்கொண்டு போலியான வாகன அனுமதிப்பத்திரத்தை தயாரித்துக் கொடுத்தல் மற்றும் பழைய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு பதிலாக புதிய போலியான சாரதி அனுமதி பத்திரத்தை தயாரித்துக் கொடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் குறித்த சந்தேகநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.


கைதுசெய்யப்படும்போது அவர்களிடமிருந்து 27 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், புதிய போலி சாரதி அனுமதிப்பத்திரங்களைப் வழங்குவதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 41 பழைய சாரதி அனுமதிப்பத்திரங்கள், புதிய சாரதி அனுமதி பத்திரங்களை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 81 அட்டைகள் மற்றும் பல இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »