நெல் மற்றும் மரக்கறிகளுக்கு இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை
என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.உர இறக்குமதி தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் இன்று (22) முன்னெடுக்கபடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெல், சோளம், மரக்கறி மற்றும் பெருந்தோட்டங்களுக்கு தேவையான தாவர ஊட்டச் சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க உரிமம் பெற்ற தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் முறையான தரமான விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பெரும்போக பயிர் செய்கையில் அறுவடை வீழ்ச்சி ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை தீர்க்கவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உர வகைகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் தொடர்பில் விவசாய அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டுமென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உரத்தை இறக்குமதி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நாளைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“இலங்கைக்குத் தேவையான மூன்றாம் வகை 4 வகை உரத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளோம். ஏனெனில், குறிப்பாக களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளின் விஷயத்தில் சில உதவிகள் தேவைப்படுகின்றன. ஆர்கானிக் கரைசல்களை ஒரே நேரத்தில் வழங்கப் போகிறோம். இரண்டு பருவங்கள் வரை, அவற்றுக்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒரேயடியாக இயற்கை விவசாயத்திற்குச் செல்ல முடியாது. மூன்று பருவங்களுக்குள் 100% இயற்கை விவசாயம் செய்ய நம்புகிறோம்.
விவசாயப் பொருட்களுக்கு கரிம உரங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன்படி, இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கு மே மாதம் 06 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.