(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சியினரின் இன்றைய பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்தில் ''நந்தி ஒழிக, நீதி வாழ்க” என எழுதப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் இந்து மதத்தை முன்னிறுத்தி வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் விளக்கமளித்துள்ளனர்.
இந்து மதத்தை இழிவுபடுதும் எந்தவொரு நோக்கத்திலும் இவை முன்னெடுக்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சி தமிழ் உறுப்பினர்கள் வீரகேசரிக்கு தெரிவித்தனர்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணிக்கு பொலிஸாரினால் ஏற்படுத்தபட்ட இடையூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களினால் “நந்தி ஒழிக, நீதி வாழ்க” உள்ளிட்ட சிங்கள,ஆங்கில,தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்துக்களினால் வழிபடப்படும் நந்தியை ஒழிக வென ஐக்கிய மக்கள் சக்தியினர் பாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களை எழுப்பியதாக சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு ஒரு சில அரசியல் சார் மத குருமார்களினால் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள், ''நந்தி மாதிரி குறுக்கே வராதே'' என்பது கிராமங்களில் கூறப்படும் ஒரு வழக்காடு சொல்.
மக்கள் சார்ந்து நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள், நடவடிக்கைகளின் போதெல்லாம் அரசாங்கமும் பொலிஸாரும் குறுக்கீடுகளை ஏற்படுத்துகின்றனர். நாம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய மக்கள் சக்தி போராட்டத்தின் போதும் பொலிஸார் குறுக்கீடுகளை செய்தனர்.
ஆகவே அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் இவ்வாறான குறுக்கீடுகளை கண்டிக்கும் வகையிலேயே கிராமத்து வழக்காடு சொல்லான ''நந்தி மாதிரி குறுக்கே வராதே'' என சொல்லை உதாரணமாக கொண்டு அரசாங்கம் எமது போராட்டங்களுக்கு குறுக்கே வரக்கூடாது என்பதனை வலியுறுத்தி ''நந்தி ஒழிக நீதி வாழ்க ''என்ற பதாகையை பயன்படுத்தினோமே தவிர இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கம் எமக்கோ கட்சிக்கோ சிறிதளவும் கிடையாது.
இந்த காரணிகளை வைத்து மத விமர்சனங்களை செய்ய வேண்டாம், இது இந்து மதத்துடன் கடுகளவேனும் தொடர்புபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் அல்ல என்றனர்.