உலகளாவிய பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவை விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர்வரும் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடிவதோடு, நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ´ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா´இல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
1981 ஆம் ஆண்டு ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ´ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா´ ஆரம்பிக்கப்பட்டது. இதம்முறை 24 ஆவது விருது விழா நடத்தப்பட்டது.
இலங்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் மற்றும் தனித்துவமான விருது இதுவாகும். ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகின்றது.
2019/20 மற்றும் 2020/21 நிதி ஆண்டுகளுக்குரிய இந்நாட்டின் 63 சிறந்த ஏற்றுமதி நிறுவனங்கள் இம்முறை விருதுகளைப் பெற்றுக்கொண்டன. விருதுகளைப் பெற்றுக்கொள்பவர்களைத் தெரிவு செய்தலானது, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நடுவர் குழுவொன்றின் மூலம் இடம்பெற்றது. கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலைமையின் கீழ் ஏற்றுமதித் துறையில் தொடர்ச்சியாக செயற்படுவதற்கு ஏற்றுமதியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் அர்ப்பணிப்பு மற்றும் பின்வாங்காத முயற்சிகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
உற்பத்தி பல்வகைப்படுத்தலுக்கான சிறந்த ஏற்றுமதியாளர், வளர்ந்துவரும் சந்தையில் செயற்றிறன்மிக்க ஏற்றுமதியாளர் மற்றும் இவ்வாண்டின் வளர்ந்துவரும் ஏற்றுமதியாளர் போன்ற பல புதிய விருதுகளும் இம்முறை ஜனாதிபதி ´ஏற்றுமதி விருது விழா´ இல் அறிமுகப்படுத்தியிருப்பது விசேட அம்சமாகும்.
உற்பத்திச் சேவை துறைக்கு வழங்கப்படும் விருதுக்காக, சிறந்த ஏற்றுமதியாளர் தெரிவு செய்யும்போது, ஏற்றுமதி வருமானத்துக்கு மேலதிகமாக பல அளவுகோல்கள் சேர்க்கப்பட்டிருந்தன. ஏற்றுமதிக்காக பெறுமதியை சேர்த்தல், தொழில் உருவாக்கம், சந்தைப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதி வருமானத்தின் வளர்ச்சி போன்ற அளவுகோல்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
ஜனாதிபதி அவர்களினால் 24 விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த வருடத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு சில இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்ற கொள்கை ரீதியான தலையீடுகளின் அனுகூலங்களை இன்று இந்நாடு அனுபவிக்கின்றது. அதன்மூலம் புதிய உள்நாட்டு னக் கைத்தொழில் அபிவிருத்திக்கு வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்த புதிய கைத்தொழில்களை போஷித்து, குறுகியகால இலாபம் ஈட்டுவதற்கு பதிலாக உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய தரமான உற்பத்திகளை உருவாக்குவதற்கு கைத்தொழிலாளர்கள் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக இலங்கையில் தனித்துவமான திறன்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
பசுமை விவசாய உற்பத்தி மற்றும் பதப்படுத்தல் துறைகளுக்காக முதலீடுகளுக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் நிலவுவதோடு, இந்த உற்பத்திகளுக்கு புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இலங்கையில் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் மேலும் பல்வேறு ஏற்றுமதி பொருளாதார பெறுமதி ஒன்றை நாட்டில் உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஏற்றுமதித் துறையில் நிலவுகின்ற சிக்கல்களை உடனடியாக தீர்ப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, ஏற்றுமதித் துறையின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினர் கைகோர்த்து இணைந்துச் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திலிருந்து தெளிவான ஏற்றுமதி அபிவிருத்தித்திட்டம் ஒன்றின் கீழ் ஏற்றுமதித் துறையின் மேம்பாட்டுக்காக நடவடிக்கைகள் எடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு குறிப்பிட்டார்.
தற்காலத்தில் நிலவுகின்ற உலகளாவிய பொருளாதார சிக்கல்களின் முன்னே, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு பங்களிக்க கூடிய வகையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஏற்றுமதியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், வர்த்தக மற்றும் ஏற்றுமதித் துறைசார்ந்த முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.