Our Feeds


Monday, November 1, 2021

Anonymous

ஞானசாரர் நியமனத்தின் மூலம் மக்கள் மத்தியில் ராஜபக்க்ஷக்கள் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது! - பிரதமரின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ்

 



(நூருல் ஹுதா உமர்)


நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து, போராடி இந்த நாட்டுக்காக உருவாக்கிய அரசாங்கம் திசை தெரியாமல் செல்லும் கப்பலுக்கு ஒப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் திசை தெரியாமல் செல்லும் இந்த கப்பலுக்கான திசையை சரியாக காட்ட எங்களால் முடியாவிடின் சமூகத்துக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் சரிவர நிறைவேற்ற முடியாது. போகின்ற கப்பலை தாள விடவும் முடியாது. இனிவரும் காலங்களில் சரியான பாதைக்கு கொண்டு செலுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் தெரிவித்தார்.

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் 15ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கவிஞர் என்.எம். அலிக்கான் எழுதிய “நெஞ்சில் பூத்த நெருப்பு” கவிதை வெளியிட்டு விழா சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகைக்காடு பாபா றோயல் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற போது முன்னிலை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் பேசுவோர் விகிதாசாரத்தில் சிறிய எண்ணிக்கையினராக இருந்தாலும் உலகளவில் மொழியால் பெரும்பான்மையினரே. மொழியை கொண்டே பிரிவினை வாதத்தை விதைக்கும் சில கிருமிகள் இந்த நாட்டில் தோன்றியுள்ளன. அங்கொன்றும் இங்கொன்றும் பேசும் கலாசாரத்தை மக்களே ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

பெரும்பான்மை மக்களுடன் நாங்கள் இணைந்து செல்லவேண்டும் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கொரோனா தொற்றுள்ள முஸ்லிம் ஜனாஸாக்கள் தீக்கிரையாக்கப்பட்டபோது அரசின் ஆதரவுத்தளத்திலிருந்து கொண்டே எரிப்புக்கு எதிராக நானும் எதிர்ப்பு போராட்டங்களை உடனடியாக ஆரம்பித்தேன். ஐநா, இஸ்லாமிய நாடுகளின் அமைப்புக்கள் போன்றவற்றில் முறையிட்டு நீதி கோரினேன். இதனால் எனக்கு பல்வேறு எதிர்ப்புக்கள் எழுந்தன. அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. சமூகத்தின் குரலாகவே நான் ஒலித்துக் கொண்டிருந்தேன்.

ஜனாஸா நல்லடக்கம் செய்ய அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அந்த விவகாரம் பின் நோக்கிச் செல்ல காரணம் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தில் ஏற்பட்ட தாமதமே. ஏனைய எமது அரசியல்வாதிகளைப் போன்று பொய்யான அரசியலை நாங்கள் செய்ய விரும்பவில்லை. விருப்பு, வெறுப்புகள் தொடர்பில் நான் அலட்டிக்கொள்வதில்லை. சமூகப்பணியில் பேசுவதில் நான் எப்போதும் தயங்குவதில்லை. கட்சிபேதங்கள் துறந்து எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டிய காலம் வந்துள்ளது.

முக்கிய குழுவொன்றின் தலைவராக ஞானசாரவை ஜனாதிபதி நியமித்துள்ளார். அது தொடர்பில் பலத்த விமர்சனத்தை நான் முன்வைத்துள்ளேன். இது அரசுக்குள்ளிருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை. அளுத்கம சம்பவம் தொடர்பில் மக்களுக்கு ராஜபக்ஷக்கள் மீது சந்தேகம் இருந்தது. அதை இவரின் நியமனம் வலுப்படுத்துவது போன்று அமைந்துள்ளது. இவ்விடயங்களில் மஹிந்தராஜபக்ஷ தொடர்புபடவில்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »