Our Feeds


Monday, November 1, 2021

SHAHNI RAMEES

முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்ற பகிர்வுபத்திரத்தை வாபஸ் பெற்றதன் பின்னணி!


 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விசேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பகிர்வு பத்திரத்தை வாபஸ்பெற, சட்ட மா அதிபர் எடுத்த தீர்மானமானது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் வழங்கிய இரகசிய அறிக்கை ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவாகும் என மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று (01) அறிவிக்கப்பட்டது.



இந்த குற்றப்பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு இன்று மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலியில் பரிசீலனைக்கு வந்த போதே இந்த விடயம் தெரிய வந்தது.


அரசியலமைப்பின் 140 ஆவது அத்தியாயத்துக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இது குறித்த எழுத்தாணை நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவுக்காக இம்மனு பரிசீலனைக்கு வந்திருந்த்து.


இதன்போது மனுவில் ஒரு பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே, குற்றப் பத்திரிகியை வாபஸ் பெறும் தீர்மானமானது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஒருவர் அளித்த அறிக்கை ஒன்றை மையப்படுத்தி சட்ட மா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அந்த அறிக்கை இரகசிய அறிக்கையாகும்.’ என தெரிவித்தார்.


இதனையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என தீர்மானிக்க முன்னர், அந்த இரகசிய அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டது. அதன்படி நாளை அந்த அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு மனு மீதான பரிசீலனைகளை நாளைய தினத்துக்கு உத்தரவிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »