Our Feeds


Tuesday, November 9, 2021

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கன் விமான சேவையை தற்போது விற்பனை செய்வதற்கான காரணமென்ன? - ஹரீன் பெர்னாண்டோ கேள்வி

 

நா.தனுஜா

ஸ்ரீலங்கன் விமானசேவையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கன் விமானசேவையின் ஊடாக நாமல் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட கென்ய பயணத்திற்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்டதா? அதேபோன்று ஜனாதிபதியின் அண்மைய வெளிநாட்டு விஜயங்களின் போது அவரது பாரியாரின் விமான டிக்கெட்டுக்கான கொடுப்பனவுகள் யாரால் செலுத்தப்படுகின்றன?

கடந்த 2015 - 2019 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமானசேவையைத் தனியார்துறையிடம் வழங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நாம் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தற்போது அதனை விற்பனைசெய்யும் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (8 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 



அங்கு அவர் மேலும் கூறியதாவது,

 

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒருவருடகாலம் பூர்த்தியடைந்தபோது அப்போதைய நிலைவரங்களின் அடிப்படையில் நாம் 'சேர் ஃபெயில்' என்ற வாசகத்தைக் கூறினோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். 

அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று இரண்டாவது வருடமும் நிறைவடையவுள்ள நிலையில், தற்போயை சூழ்நிலைகளின் போது அவருக்கு என்ன கூறுவதென்று நாட்டுமக்களே தீர்மானிக்கவேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் விவசாயிகள் பெரும் எண்ணிக்கையானோர் எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பில் திரள்வார்கள். இயலுமானால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறையைப் பிரயோகித்துப்பார்க்குமாறு ஜனாதிபதிக்கு சவால்விடுகின்றோம். 

அதேவேளை அண்மையில் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய தருணத்திலும் சில தினங்களுக்கு முன்னர் வீரகெட்டியவில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதும் கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த இந்நாட்டுப்பிரஜைகள் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை.

மாறாக சேதனப்பசளையைப் பயன்படுத்துமாறு விவசாயிகளின் கழுத்தைப்பிடித்து தன்னால் கூறமுடியும் என்று ஜனாதிபதி அவரது உரையில் சுட்டிக்காட்டுகின்றார். அவர் கடந்த காலத்தைப்போன்று தற்போதும் மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே செயற்படுகின்றார்கள்.

முதலில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் அவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி எதனையும் பேசவில்லை.

அடுத்ததாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழிருந்த முத்துராஜவெல சதுப்புநிலப்பகுதியை நகர அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

மறுபுறம் அருட்தந்தை சிறில் காமினி கைதுசெய்யப்படமாட்டார் என்று குற்றப்புலனாய்வுப்பிரிவு கூறுகின்றது. அவ்வாறெனில், அவரைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்தது யார் என்ற கேள்வி எழுகின்றது. 

மேலும் ஸ்ரீலங்கன் விமானசேவையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கன் விமானசேவை நட்டமடைந்திருப்பதற்கான காரணம் என்ன? அச்சேவையின் 'சார்ட்டர்' விமானத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கென்ய பயணத்திற்கு உரிய கொடுப்பனவு செலுத்தப்பட்டதா? அதேபோன்று ஜனாதிபதியின் அண்மைய வெளிநாட்டு விஜயங்களின்போது அவரது பாரியாரின் விமான டிக்கெட்டுக்கான கொடுப்பனவு யாரால் செலுத்தப்படுகின்றது? இத்தாலிக்குச் சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சுமார் 50 பேர்வரையில் சென்றார்கள் என்று கூறப்படும் விடயத்தில் உண்மை இல்லையா? கடந்த 2015 - 2019 வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் விமானசேவையைத் தனியார்துறையிடம் வழங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது அதனை விற்பனைசெய்யும் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதற்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றோம். இந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி விவசாயிகள் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பில் நடைபெறவுள்ள மாபெரும் மக்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ளவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். 



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »