'மக்களுக்கு வழங்காது மக்களிடம் இருந்து பெறுவது' என்ற கொள்கையிலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது
என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20), வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் கடந்த 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை கேட்டுக்கொண்டிருந்தோம். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் தொனிப் பொருளை கூறாவிட்டாலும், பஷிலின் கொள்கைப்படி 'மக்களுக்கு வழங்குவதாக அன்றி மக்களிடம் இருந்த பெறுவது' என்பதாகவே இருக்கின்றது.
வரவு செலவுத் திட்டத்தில் புள்ளி விபரங்களுடன் கொடுக்கல் வாங்கலுடன் நியாயமானதாக இருக்க வேண்டும். அதில் வரவு செலவுத் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்குவதாகவே இருந்தது.
அதேபோன்று வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களில் நம்பிக்கை பிறக்க வேண்டும். ஆனால் அதனை உருவாக்கவில்லை. அதில் உணவு பாதுகாப்பு தொடர்பாக கதைக்கும் போது வீட்டில் சட்டி முட்டிகள் வெறுமையாகிவிட்டன. மூன்று மாதங்களுக்கு முன்னர் கிலோவொன்று 530 ரூபாவுக்கு இருந்த கோழி இறைச்சி இப்போது 700 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது.
இன்னும் ஒரு மாதமளவில் அதன் விலை 3000 ரூபாவுக்கு செல்லும் என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். கோழி இறைச்சி சாப்பிடாது புடலங்காய் சாப்பிட வேண்டி வரும். இதனால் உணவுப் பாதுகாப்பை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. உரப் பிரச்சனைக்கு தீர்வு காணாது விவசாயிகளிடம் சென்றால் மண்வெட்டியால் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையே உருவாகும்.
இதேவேளை நாட்டின் டொலர் பிரச்சனைக்கு வரவு செலவுத் திட்டத்தில் தீர்வுகள் எதுவும் முன்வைக்கவில்லை. நாங்கள் மூடிஸ் நிறுவனத்தின் தரப்படுத்தில் வீழ்ச்சியடைந்துள்ளோம்.
அந்தளவுக்கு கடன் அதிகரித்துள்ளது. இதேவேளை பொலிஸ் அமைச்சர் மிலேனியம் சிற்றி பாதுகாப்பு இல்லம் தொடர்பாக கூறியவை தொடர்பில் கூற வேண்டும். மிலேனியம் சிற்றி சம்பவத்தின் போது நான் யாழ்ப்பாண கட்டளை தளபதியாக பணியாற்றினேன். அப்போது கொழும்பில் பாதுகாப்பு இல்லம் இருந்தது. தொலைதூரம் போகும் ஆயுதம் இருப்பதாக கூறினார். ஆனால் அது முற்றிலும் பொய்யாகும்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஒருபோதும் தொலைதூர ஆயுதங்களை வைத்திருக்கவில்லை. கொழும்புக்கு ஆர்.பி.ஜீ கொண்டுவரவோ, கிளைமோர் கொண்டுவரவோ தேவையிருக்கவில்லை.
அதனை விசேட படையணியே செய்தது. அதனை அங்கே வைத்திருந்த அதிகாரியொருவரின் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கத்தின் மீது சுமத்த முயற்சித்தனர். அப்போது இராணுவ காட்டிக்கொடுப்பு போன்று ஆட்சியை கவிழ்த்தனர்.
ஆனால் அங்கு இருந்தவர்கள் கைது செய்யப்பட்டமையை முன்னாள் இராணுவ அதிகாரி என்ற வகையில் அங்கு எந்தவித சட்டவிரோத செயற்பாடும் நடக்கவில்லை என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்றார்.