பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.
சபையிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ வெளியேறிய சந்தர்ப்பத்தில், மஹிந்த ராஜபக்ஸவை, ரணில் விக்ரமசிங்க பின்தொடர்ந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் மஹிந்தவை சந்தித்த ரணில், “இன்று உங்களை சந்திப்பதற்காகவே வருகைத் தந்தேன்” என கூறியுள்ளார்.
“அப்படியா!, அப்படியென்றால் எனது அலுவலகத்திற்கு செல்வோம்” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவுடன் அந்த சந்தர்ப்பத்திலிருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவையும், மஹிந்த ராஜபக்ஸவையும் தனியாக சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதன்படி, பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சுமார் 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இருவருக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், பெரும்பாலும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.