Our Feeds


Sunday, November 14, 2021

SHAHNI RAMEES

ஆளும் கட்சிகளுடனான இணக்கப்பாட்டு அரசியலே எமது செல்வாக்கை தமிழ் மக்களிடம் குறைத்தது! - தமிழ் அரசியல்வாதி


 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு செல்வாக்கை குறைத்த சாபக்கேடான காலம் நல்லாட்சி அரசு ஆட்சி அமைந்த கடந்த 2015 தொடக்கம் 2020, வரையுமான ஐந்து வருடங்கள். இது மறைக்கமுடியாத உண்மை என்பதை புரிந்து கொள்ளட்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


கடந்த 2020, பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து பத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தெரிவானார்கள். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானர்கள் இதற்கு என்ற காரணம் என ஊடகவியலாளர் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு 2001ல் உருவாக்கப்பட்டு 2001 டிசம்பர் 8இல் இடம்பெற்ற தேர்தலில் 18, நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2004 ஏப்ரல் 2இல் இடம்பெற்ற தேர்தலில் 22, நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2010 ஏப்ரல் 8ல் இடம்பெற்ற தேர்தலில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 2015 ஆகஸ்ட் 17இல் இடம்பெற்ற தேர்தலில் 16, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.



ஆனால் இறுதியாக 2020,ஆகஸ்ட் 5இல் இடம்பெற்ற தேர்தலில் மிக குறைந்த 10, ஆசனங்கள் மட்டுமே பெற முடிந்தது.


இதற்கு   வேறு காரணங்களை பலர் கூறினாலும் உண்மையில் பிரதான காரணம் ஆளும் தரப்புடன் இணக்கப்பாட்டு அரசியலே எமது செல்வாக்கை குறைத்தது. 2015 பொதுத்தேர்தலுக்குப் பின்னர் நல்லாட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி தலைவர் பதவி எடுத்தாலும் எதிர்கட்சியாக செயல்படவில்லை.


வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பெறும் நோக்கில் ஆட்சியாளருடன் இணக்கப்பாடான ஆட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டதால் அதை மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்த ஆளும் தரப்பாகவே எம்மை பார்தனர்.


இதன் தாக்கம் தேசிய அரசில் மட்டும் நின்று விடவில்லை கிழக்கு மாகாண சபையிலும் நான்கு கட்சிகளுடன் இணைந்து இணக்கப்பாடான ஆட்சியில் 2015 தொடக்கம் 2017,வரை இரண்டுவருடங்கள் செயற்பட்டதால் சில அபிவிருத்திகள் செய்ய முடிந்தது.


மேலும் நான்கு கட்சிகளுடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்கப்பட்டதனை மறைத்து , ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களுக்கு பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டது என தவறான பரப்புரையை சிலர் செய்தனர்.


மேலும் எம்மீது சேறு பூசுவதற்காக பலரும் பிரசாரம் செய்தனர். போதாக்குறைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் காத்தான்குடியில் முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்த தமது ஆதரவை கூட்ட வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இராஜதந்திரத்தின் செயற்பாட்டால் தமிழ்தேசிய கூட்டமைப்பில் 11, உறுப்பினர்கள் இருந்தபோதும் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிரஸாகிய நாம் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டோம்.


இதுதான் முஸ்லிம் காங்கிரஸின் இராஜதந்திரம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எப்படி வளைத்து எடுத்தோம் என அப்பட்டமான பொய்யைக் கூறினர். இதை எமக்கு எதிரான சில கட்சிகள் தமிழ்மக்கள் மத்தியில் கடந்த தேர்தலில் பிரசாரமாக பாவித்து எமது ஆதரவை குறைத்தனர்.


தேசிய அரசில் நல்லாட்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாடான சில அரசியல் நகர்வுகளை அரசியல் யாப்பு திருத்தம், அரசியல் தீர்வை முன்னிறுத்தி செயற்பட்டாலும் சில அபிவிருத்திகள், நினைவேந்தல்கள், சில அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட்டாலும் பூரணமான எதிர்பார்த்த விடயங்களை நல்லாட்சி அரசு செய்யாமல் ஏமாற்றியது உண்மை.


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்துவதற்கான பல சந்தர்பம் இருந்தும் அதை ஏமாற்றியவர்கள் பிரதமர் ரணிலும் ஜனாதிபதி மைத்திரியும் என்பது வெளிப்படையான உண்மை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »