Our Feeds


Saturday, November 6, 2021

SHAHNI RAMEES

நுகர்வோர் அதிகாரசபையை மூடுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டம்


 (எம்.மனோசித்ரா)

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என்றும், அதனை முழுமையாக மூடிவிடுமாறும் வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (6 ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முன்னர் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம். 

நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு வரவு - செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டாம் என்றும், அதனை மூடுமாறும் வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

காரணம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதும் பின்னர் இரத்து செய்வதற்கும் மாத்திரமே இருக்கிறது. 

இதனை செய்து கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கு ஊதியமளிப்பது பிரயோசனமற்றது.

தற்போது வியாபாரிகளே விலைகளைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறெனில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை என்ற ஒன்று எதற்கு? இவ்வாறான நிலையில் சதொச கட்டடங்களையும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன விற்பனை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

இவ்வாறான கட்டடங்களை நிர்வகிக்க முடியவில்லை எனில் அதனை புணரமைத்து எம்மிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் அவற்றில் முதலீடு செய்து இலாமீட்க் காட்டுகின்றோம். நுகர்வோருக்காக எம்மால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் முடியுமானால் இணையுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினருக்கு சவால் விடுக்கின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »