வருடமொன்றுக்கு செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடனுக்கான வட்டி தாங்க முடியாத அளவிற்கு வந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாங்கள் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு கடனை செலுத்த முடியாவிட்டால் வங்குரோத்து நாடாக அழைக்கப்படுவோம்.
டொலர் பற்றாக்குறை தீவிரமடைந்தால் பருப்பு இறக்குமதி நிறுத்தப்படலாம் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று எங்களுடைய நாடு தீர்மானமிக்கதொரு இடத்திலுள்ளது. திறந்த சந்தையின் ஆரம்பமானது முடிந்தவரை டொலர்களை கடனாக பெற்று, பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, அந்த பணம் கீழ்நோக்கி பாயும் போது, புதிய மத்திய வர்க்கத்தை உருவாக்குவதில் பெரும் முக்கியமான காலமாக இருந்தது. அது ஏற்றமான கட்டம் எனக் கூறுவோம். எனினும், இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டே வரும்போது கடன் கட்டுப்பாடுகளை முன்னெடுப்பதில் நெருக்கடியான நிலைமையும் வரும். அதுவே, வீழ்ச்சியான காலப்பகுதியாகும். இப்போது நாங்கள் இந்த வீழ்ச்சியான தீர்மானமிக்க காலப்பகுதியிலேயே இருக்கின்றோம்.
எங்களுடைய வரவு – செலவுத்திட்டத்தை எடுத்தால் ரூபா வரவு – செலவுத்திட்டத்தைப் போன்று டொலர் வரவு – செலவுத்திட்டமும் இருந்தது. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டியை எங்களால் ரூபாவில் செலுத்த முடியாது. ஆகவே, உலக நாடுகளிலுள்ள எங்களுடைய தூதரகங்களுக்கு ரூபாக்களை அனுப்புவதில் எவ்வித பயனுமில்லை. மாறாக, டொலர்களையே அனுப்ப வேண்டும்.
மேலும், எங்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களையே அனுப்ப வேண்டும். டொலர் பட்ஜெட் ஒன்று சரியாக இருந்தாலே ரூபா பட்ஜெட்டை சமாளிக்க முடியும். டொலர் பட்ஜெட் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டால் ரூபா பட்ஜெட்டை தயாரித்து முன்னோக்கிச் செல்ல முடியாது.
இந்த நிலையில், தற்போது சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பினால் கிடைக்கும் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் வருடம் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடனுக்கான வட்டியும் தாங்க முடியாதளவிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் நாங்கள் ஏழு பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளதென நினைக்கின்றேன். நாங்கள் இதுவரை செலுத்த வேண்டிய தவணைக்கடனை செலுத்த தவறவில்லை. கடனை செலுத்த முடியாவிட்டால் அந்த நாடு வங்குரோத்து நாடு என ஏனைய நாடுகளால் அழைக்கப்படும்.
எரிபொருள் உட்பட பல பொருட்களை நாங்கள் டொலர் செலுத்தி பெற்றுக்கொண்டு வந்து இங்கு விநியோகம் செய்கின்றோம். ஆனால், இலங்கையில் உற்பத்தி செய்வதை ஏற்றுமதி செய்து டொலர் சம்பாதிப்பது குறைவு. அப்படியெனில் இந்த டொலர் பட்ஜெட் எவ்வாறு சரியாகும். உள்நாட்டில் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் மட்டுமே இதையெல்லாம் எதிர்கொள்ள முடியும். இதனால் நாட்டிலிருந்து வீணாக வெளியேறும் டொலரை சேமிக்க முடியும். இவற்றின் மூலம் ஏற்றுமதி சந்தையை வெற்றிக்கொள்ளும் அளவிற்கு டொலர்களை கொண்டுவர முடியும்.
எங்களால் ரூபாவை அச்சிட்டு பெற்றுக்கொள்ள முடியும். டொலரை அச்சிட முடியாது. எனவே, நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தால், அதை உண்மையாக ஏற்றுக்கொண்டால், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. நம் நாட்டில் எமக்கான உணவை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். நாம் பாண் மற்றும் பருப்புக்கு பழகிவிட்டோம். ஆனால், நாட்டில் ஒரு பருப்பைக் கூட உற்பத்தி செய்வதில்லை. இந்த நிலையில் டொலர் பற்றாக்குறை தீவிரமடைந்தால் பருப்பு இறக்குமதியும் நிறுத்தப்படலாம். அவ்வாறு நடந்தால் நாம் பழகிய வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாகும் என்றார்.