இந்தியாவை ஆட்சி செய்த முகலாய பேரரசர் சாஜஹான் சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாயலான டெல்லி ஜமா மஸ்ஜிதில் நிரந்தரமாக காட்சிக்கு வைப்பதற்காக புனித குர்ஆனில் சிங்கள மொழிபெயர்ப்பை புது டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதுவராலயம் வழங்கியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் வெளியிடப்பட்ட திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதி இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவரான மிலிந்த மொரகொடவினால் கடந்த 15ம் திகதி இந்தியாவின் தலைமை இமாம் மற்றும் டெல்லி ஜமா மஸ்ஜித் ஷாஹி இமாம் செய்யத் அஹ்மத் புகாரி அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
திருக்குர்ஆனின் பிரதி வெளிப்படையான காட்சிப் பெட்டியில் பொருத்தப்பட்டு பள்ளிவாயலின் முக்கியமானதொரு இடத்தில் வைக்கப்பட்டது.
திருக்குர்ஆனின் சிங்களப் பதிப்பை நிரந்தரமாக காட்சிக்கு வைப்பதற்கு முன்னதாக, இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் ஷாஹி இமாம் செய்யத் அஹ்மத் புகாரி ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இஸ்லாமிய உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இலங்கை மக்களின் நல்லெண்ணம் மற்றும் நட்பின் இந்த ஏற்பாட்டை பாராட்டிய ஷாஹி இமாம் இலங்கை ஒரு முற்போக்கான நாடு என சுட்டிக்காட்டினார்.
சாத்தியமான பரிமாற்றத் திட்டத்திற்காக இந்தியாவிலிருந்து முக்கிய இஸ்லாமைிய அறிஞர்கள் மற்றும் பிரமுகர்களை அடையாளம் காண்பதற்காக இமாம் புகாரியின் உதவியை தூதுவர் மிலிந்த மொரகொட கோரினார்.
இமாம் புகாரி மற்றும் டெல்லி ஜமா மஸ்ஜித் ஆகியவற்றுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு இலங்கை இஸ்லாமிய பிரமுகர்களை ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.