இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவலை வெளியிடப்படுவதால், இலங்கை பொலிஸாருக்கு அளித்து வரும் பயிற்சிகளை
நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.2010ஆம் ஆண்டு முதல் இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை பொலிஸ்துறைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் தொடர்ந்து பயிற்சியளித்து வருவதை எதிர்த்து மனித உரிமைகளுக்கானபிரிவினா் எதிர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்தே இந்த பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்துக்கு இடையிலான பயிற்சி ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையில் அது மீண்டும் புதுப்பிக்கப்படாது என்று ஸ்கொட்லாந்து பொலிஸ்பிரிவின் தலைவர் (Chief Constable) ஐயான் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தப் பயிற்சி கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிறுத்திவைக்கப்பட்டது என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் ஆணைக்குழுவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கையாள்வது தொடர்பாக இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பிரிவு பயிற்சி அளித்து வந்தது. இதற்காக ஸ்கொட்லாந்து பொலிஸ் அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வந்தனர்.
இந்த ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்கும் நடவடிக்கைகள் தங்கள் தரப்பில் எடுக்கப்படாது என்று இலங்கை அரசிடம் தெரிவிக்குமாறு கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர் ஆணைக்குழுவிடம் ஸ்கொட்லாந்து காவல்துறை கடிதம் வாயிலாகக் கூறியுள்ளது.