படல்கும்புர − பசறை பிரதான வீதியின் அளுபொத்த பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து மண்டையோடு ஒன்று படல்கும்புர பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அளுபொத்த பகுதியிலுள்ள காணியொன்றில் மண்டையோடு காணப்படுவதாக 119 பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற அழைப்புக்கு அமைய, இந்த மண்டையோட்டை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
10 வயது சிறுவன் ஒருவன் முதலில் இந்த மண்டையோட்டை கண்டுள்ளதுடன், அது குறித்து தனது சகோதரிக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அதன்பின்னர், குறித்த யுவதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கிய தரப்பிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளதுடன், குறித்த மண்டையோடு அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு − டேம் வீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், பயணப் பையொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் படல்கும்புர பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் என பின்னர் கண்டறியப்பட்டது.
குறித்த சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த யுவதியின் தலையை பொலிஸாரினால் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, குறித்த மண்டையோடு, டேம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட யுவதியுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில், சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன