யூ.எல். மப்றூக் –
கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது.
அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
முஸ்லிம்கள் மீதான மற்றொரு வெறுப்புத் தாக்குதலின் ஆரம்பமாக அமைந்த அந்த சம்பவத்தினுடைய உண்மைகளின் பெரும் பகுதிகள் வெளியே வரவேயில்லை.
அந்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்த சிங்களவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட கொத்து ரொட்டியில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகப் பரப்பப்பட்ட தவறான தகவல் மற்றும் வெறுப்பு பிரசாரங்களின் காரணமாக, அந்த ஹோட்டலும் அதன் முஸ்லிம் முதலாளி மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டதோடு, முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவெறுப்புத் தாக்குதலாகவும் அது நடந்தேறியது.
26 பெப்ரவரி 2018 அன்று இரவு அம்பாறை நகரில் அமைந்திருந்த நியூ காசிம் ஹோட்டல் மீதும், அதன் முஸ்லிம் முதலாளி மீதும், அங்கு திரண்டு வந்த சிங்களவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்து தப்பிச் சென்று அம்பாறை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் பாதுகாப்புக்காகத் தஞ்சமடைந்திருந்த ஹோட்டல் ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதன்போது அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்டதோடு, அங்கிருந்த குர்ஆன் பிரதிகளும் நாசப்படுத்தப்பட்டன. மேலும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களும், அம்பாறை நகரில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான மேலும் சில வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டதோடு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறை நடந்து சில நாட்களின் பின்னர், 04 மார்ச் 2018 அன்று திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது, பல நாட்கள் தொடர்ச்சியாக வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நியூ காசிம் ஹோட்டல் தாக்குதல்
நியூ காசிம் ஹோட்டலை இறக்காமத்தைச் சேர்ந்த ஏ.எல். பர்சித் (தற்போது 31 வயது) என்பவர் தனது சகோதரனுடன் இணைந்து 2017ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தி வந்தார். அந்த ஹோட்டல் அமைந்திருந்த கட்டடம் அம்பாறை நகரைச் சேர்ந்த சிங்களவர் ஒருவருக்குச் சொந்தமானது. வாடகை அடிப்படையில் அந்தக் கட்டடத்தை பர்சித் பெற்றிருந்தார். முன்னர் ‘காசிம் ஹோட்டல்’ எனும் பெயரில் வேறு தரப்பினர் அந்த இடத்தில் ஹோட்டலொன்றை நடத்தி வந்தனர். அம்பாறை நகரில் ‘காசிம் ஹோட்டல்’ மிகவும் பிரபல்யமாக இருந்ததால், அந்த இடத்தில் பின்னர் ஹோட்டல் அமைத்துக் கொண்ட பலரும் ‘காசிம் ஹோட்டல்’ எனும் பெயர் இருக்கத்தக்கதாகவே தங்கள் ஹோட்டல்களுக்குப் பெயர் வைத்துக் கொண்டனர்.
நியூ காசிம் ஹோட்டல் 2018ஆம் ஆண்டு தாக்குதலுக்குள்ளானதால் தமக்கு சுமார் 16 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக அதன் முதலாளி பர்சித் தெரிவிக்கின்றார். ஹோட்டல் தாக்குதலுக்குள்ளான பின்னர் தொழிலிழந்த பர்சித், 2020ஆம் ஆண்டு குவைத் நாட்டுக்கு சாரதியாக தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றார். ஆயினும் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக அவருக்கு அங்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. அதனால் அவர் கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பினார்.
இந்தக் கட்டுரைக்காக தகவல்களைக் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பர்சித்தை சந்திக்க அவரின் இறக்காமம் வீட்டுக்கு நாம் சென்றிருந்த போது, அவர் வெளிநாட்டிலிருந்து வந்து 10 நாட்களே ஆகியிருந்தன.
நடந்தது என்ன?
சம்பவ தினமன்று நடந்த விடயங்கள் குறித்து – பர்சித்திடம் கேட்டபோது;. அவர் விரிவாகப் பேசினார்.
”2018 பெப்ரவரி 26ஆம் திகதி இரவு 09 அல்லது 10 மணியிருக்கும்; எங்கள் ஹோட்டலுக்கு வழமையாக வருகின்ற சிங்களவர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. சாப்பிடுவதற்கு ‘பராட்டா’வும் கறியும் கேட்டார். அப்போது சட்டியின் அடியில் சிறிதளவே கறி இருந்தது. அதனையும் பராட்டாவையும் அவருக்குக் கொடுத்தோம்” என்றார் பர்சித்.
அதாவது, அன்றைய தினம் அந்த நபருக்கு சாப்பிடுவதற்கு ‘பராட்டா’தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ‘காசிம் ஹோட்டலில் வழங்கப்பட்ட கொத்து ரொட்டிக்குள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலந்து கொடுக்கப்பட்டதாகவே’ அன்று முதல் – இன்று வரை எல்லா இடங்களிலும் பேச்சுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பர்சித் தொடர்ந்து பேசினார். “எங்கள் ஹோட்டலில் கறியை கெட்டியாக்குவதற்கு அதனுள் கொஞ்சம் சோளம் அல்லது கோதுமை மாவை கலப்பதுண்டு. அவ்வாறு கலந்த கோதுமை மா, சிறிய உருண்டைகளாக, அந்த நபருக்கு வழங்கிய கறியினுள் கிடந்துள்ளன.
பராட்டாவும் கறியும் சாப்பிட்ட நபர்; அதனுள் மாவு உருண்டைகளைக் கண்டவுடன் அவை என்ன என்று கேட்டார். அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு அது என்ன என்பதை விளக்கினார்கள். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
அங்கு மேலும் சில சிங்களவர்களும் இருந்தனர். அவர்கள் இவரிடம்; ‘சாப்பாட்டுக்குள் குளிசை போட்டுத் தருகிறார்கள், அதனை நீ சாப்பிடுகிறாயா’ என்று கேட்டார்கள். அதனால் விடயம் பிரச்சினையானது.
அங்கிருந்த சிங்களவர்கள் – கடை ஊழியர்களைத் தாக்கினார்கள். நாங்கள் எவ்வளவு விளக்கிச் சொல்லியும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்கள் ஹோட்டலுக்கு நான்தான் புதியவர். அங்கு பணி புரிந்த ஊழியர்கள் 10, 25 வருடங்கள் அந்த இடத்திலேயே பணி புரிந்து வந்தவர்கள். பிரச்சினைப்பட்ட சிங்களவர்களை எமது கடை ஊழியர்கள் மிக நன்றாக அறிவார்கள்.
ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள் பயந்து – பாதுகாப்புக்காக பள்ளிவாசலுக்கு ஓடி விட்டார்கள். நான் ஹோட்டலில் இருந்தேன். அன்றைய வியாபாரத்தில் கிடைத்த பணம், ஹோட்லிலுள்ள பொருட்கள் மற்றும் சிசிரிவி கமரா ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினேன்.
பிரச்சினை சூடுபிடிக்க ஆரம்பித்தது.500க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் ஹோட்டலருகில் திரண்டு வந்தார்கள். பலர் ஹோட்டலுக்குள் புகுந்து விட்டனர்.
எனக்கு அந்த நிலைமையை எவ்வாறு கையாள்வதெனப் புரியவில்லை. நான் முழுவதுமாகப் குழப்பமடைந்த நிலையில் இருந்தேன்” என்று கூறிய பர்சித்; தனது முகத்தில் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.
”சம்பவம் நடந்தபோது அங்கு பொலிஸார் நான்கு, ஐந்து பேர் நின்றிருந்தனர். ஆனால் அவர்களை அங்கிருந்த கூட்டத்தினர் ஹோட்டலின் உள்ளே விடவில்லை.
அந்த நேரத்தில் எமது ஹோட்டல் கட்டடத்தின் உரிமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் சிங்களவர், பாடசாலை அதிபராக கடமையாற்றுகிறார். சம்பவ இடத்துக்கு அவரும் அவருடைய மகனும் வந்து, நிலைமையை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவருடைய மகனை அங்கிருந்த கூட்டத்தினர் தள்ளிவிட்டதோடு, கட்டட உரிமையாளரையும் தாக்குவதற்கு முயன்றனர். அதனால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
பொலிஸார் பார்த்திருக்கும் போதே, அங்கிருந்த கூட்டத்தினர் எங்கள் ஹோட்டலை உடைத்தார்கள். எனக்கும் அடித்தார்கள். அவர்களின் கைகளில் பொல்லுகள் இருந்தன.
பிறகு பொலிஸார் என்னை அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் ஹோட்டலை பொலிஸார்தான் மூடினார்கள். அப்போது பொலிஸாரிடம் அங்கு சிசிரிவி பதிவுகள் உள்ளதாக நான் கூறினேன். அதனை தாங்கள் பார்த்துக் கொள்வதாக பொலிஸார் சொன்னார்கள். ஆனால் அதன் பிறகு, அங்கு அந்தக் கூட்டத்தினர் ஹோட்டலை உடைத்து, அங்கிருந்த சிசிரிவி கமராவின் காட்சிகள் பதிந்திருந்த சாதனங்களைக் கொண்டு சென்றிருந்தார்கள். பொலிஸார் அதனைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர்.
பொலிஸ் நிலையத்தில் மறுநாள் வரை இருந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர். பிற்பகல் 03 மணியளவில் சட்டத்தரணிகள் மூவர் பொலிஸ் நிலையம் வந்தார்கள். பொலிஸார் என்னை நீதிமன்றம் அழைத்துச் சென்றார்கள். அங்கு நீதவானுடைய அறையில் என்னை ஆஜர்படுத்தினார்கள். அங்கு அந்த சட்டத்தரணிகள் மூவரும் எனக்காக ஆஜராகினர். விடயங்களைக் கேட்டறிந்து கொண்ட நீதவான் எனக்குப் பிணை வழங்கினார். பிறகு, அங்கிருந்து எனது வீட்டுக்குப் போக முடியுமா என்று நீதவான் கேட்டார். எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினேன். எனது வழக்கு முடியும் வரை பொலிஸாரின் பாதுககாப்புடன் நீதிமன்றுக்கு வந்து போகுமாறு நீதவான் அறிவுறுத்தல் வழங்கினார்.
எனக்காக சட்டத்தரணிகள் ரதீப், ருஷ்தி மற்றும் முஹைமீன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் என்னிடம் எந்தவிதக் கட்டணங்களும் பெற்றுக்கொள்ளவில்லை.
சாப்பாட்டில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை கலந்து கொடுத்ததாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எங்கள் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் – ரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பகுப்பாய்வின் முடிவில், நாங்கள் வழங்கிய உணவில் அவ்வாறு எந்தவொரு மருந்தும் கலக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. அதனால், எனக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது” என்றார் பர்சித்.
அது திட்டமிட்ட தாக்குதல்: சட்டத்தரணி ரதீப்
இது இவ்வாறிருக்க, நியூ காசிம் ஹோட்டல் விவகாரமானது முறையாகத் திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் நடவடிக்கை என்கிறார் சட்டத்தரணி ரதீப் அஹமட். இவர், ஹோட்டல் முதலாளி பர்சித் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவராவார்.
”பிரச்சினையைத் தொடங்குவதற்கு தாக்குதல்தாரிகளுக்கு ஒரு ‘பொரி’ தேவைப்பட்டது” என்றும், ”அதுதான் காசிம் ஹோட்டல் விவகாரம்” எனவும் கூறுகின்ற சட்டத்தரணி ரதீப்; “அரசியல்வாதியொருவரின் வழிகாட்டுதலில்தான் அந்த சம்பவம் நடந்ததாக எமக்கு தெரியவந்தது” என்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஹோட்டல் முதலாளி பர்சித்துக்கு ஆதரவாக, தன்னார்வ அடிப்படையில் மூன்று சட்டத்தரணிகள் இணைந்து ஆஜரானார்கள். அவர்கள் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ரதீப் அஹமட்,பாலமுனையைச் சேர்ந்த ஹஸ்ஸான் ருஷ்தி மற்றும் கல்முனையைச் சேர்ந்த முஹைமீன் காலித் ஆகியோராவர்.
அந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தரணி ரத்தீப் மேலும் கூறுகையில்;
“தாக்குல் பற்றிக் கேள்வியுற்ற நாங்கள் மூவரும் (சட்டத்தரணிகள் ரதீப், ருஷ்தி, முஹைமீன்) என்ன நடந்துள்ளது என்று அறிந்துகொள்வதற்காக மறுநாள் அம்பாறை நகருக்குச் சென்றோம். அங்கு பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டோம். பிறகு பொலிஸ் நிலையம் சென்றோம். அங்கு பிரச்சினைக்குரிய ஹோட்டல் முதலாளி பர்சித்தைக் கண்டோம். அவரின் உறவினர்கள் இருவரும் அங்கு நின்றிருந்தனர்.
அப்போது அவரை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கு பொலிஸார் தயாராகினர். நாங்களும் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்திருந்தன. ஆயினும் இந்த விடயத்துக்காக மீண்டும் நீதவான் வருகை தந்தார். அங்கு பர்சித்துக்காக நாம் ஆஜரானோம். பிணை கிடைத்தது. பின்னர் அங்குள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்மைச் சந்திக்க வருமாறு தொலைபேசியில் அழைத்தார். சென்று சந்தித்து பேசினோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று நாம் அவரிடம் கேட்டோம். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில்தான் பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயம் அமைந்துள்ளமையினையும் நாம் சுட்டிக்காட்டினோம்.
பிணை கிடைத்து இரண்டு நாட்களின் பின்னர்தான் பர்சித்தினுடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக நாங்கள் மீண்டும் பொலிஸ் நிலையம் சென்றோம். அன்றைய தினமும் சம்பவத்துடன் தொடர்புடைய சிங்களவர்கள் சிலர் – பொலிஸ் நிலையம் வந்தனர். அதனால் பொலிஸாரின் பாதுகாப்புடன் அங்கிருந்து சென்று விடுமாறு நிலையப்பொறுப்பதிகாரி எங்களை அனுப்பி விட்டார்.
சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்தின் பின்னர் மார்ச் 02ஆம் திகதிதான் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள். நாங்கள் பாதுகாப்பின் நிமித்தம் வேறொரு வாகனத்திலேயே நீதிமன்றம் சென்றோம். அங்கு சுமார் 800 வரயிலான சிங்களவவர்கள் நீதிமன்றுக்கு வெளியில் திரண்டிருந்தனர்.
வழக்கு நடவடிக்கையின் போது பொலிஸார் பக்கச்சார்பாகவே நடந்து கொண்டனர். குறித்த ஹோட்டலில் சிங்களவர் ஒருவரும் வேலைசெய்தார் என்பதை நீதிமன்றில் சுட்டிக்காட்டிய பொலிஸார், நடந்த சம்பவம் இன வன்முறை இல்லை எனக் கூறினர். அன்றைய தினம் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
மறுநாள் அம்பாறை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஒலுவில் பிரதேசத்துக்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். அவர்களிடம், அம்பாறை சம்பவத்தில் பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொண்ட விதம் குறித்து நாம் விளக்கினோம். அதன் பிறகுதான் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 09 பேர், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்குப் பிணை கிடைக்கவில்லை. சுமார் 09 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள்.
இது முறையாகத் திட்டமிடப்பட்ட வன்முறைத் தாக்குதலாகும். பிரச்சினையைத் தொடங்குவதற்கு தாக்குதல்தாரிகளுக்கு ஒரு ‘பொரி’ தேவைப்பட்டது. அதுதான் காசிம் ஹோட்டல் சம்பவம். அரசியல்வாதியொருவரின் வழிகாட்டுதலில்தான் இந்த சம்பவம் நடந்ததாக எமக்கு தெரியவந்தது” என்றார்.
பொலிஸாரின் குற்றச்சாட்டு
மேற்படி சம்பவம் தொடர்பில் இலக்கம் 125, புதிய நகரம் – அம்பாறை எனும் முகவரியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சி ரங்கண தேசப்பிரிய என்பவர் அம்பாறை பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 2018 பெப்ரவரி 27ஆம் திகதி அம்பாறை பொலிஸார் பி(B)/5878/2018 எனும் இலக்கத்தையுடைய அறிக்கையொன்றினை அம்பாறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
அந்த அறிக்கையில், சாப்பிடுவதற்காக வழங்கப்பட்ட உணவில் ஆண்மைத் தன்மையை இல்லாமலாக்கும் ‘மலட்டு மருந்தை’க் கலந்து அம்பாறை நகரிலுள்ள காசிம் ஹோட்டலில் தனக்கு வழங்கியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
2018 பெப்ரவரி 26 அன்று இரவு 9.45 மணியளவில் முறைப்பாட்டாளர் அம்பாறை நகரிலுள்ள காசிம் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டலின் காசாளர் பராட்டா மட்டும் உள்ளது என்று கூறியுள்ளார். கறி என்ன உள்ளது என்று முறைப்பாட்டாளர் கேட்டபோது பருப்புக் கறி மட்டும் இருப்பதாக காசாளர் தெரிவித்திருக்கிறார். அப்போது மாட்டிறைச்சிக் கறி இருந்தால் தனக்கு வழங்குகுமாறு முறைப்பாட்டாளர் கேட்டுள்ளார். அதன்படி பராட்டா, பருப்புக்கறி மற்றும் மாட்டிறைச்சிக் கறி ஆகியவை முறைப்பாட்டாளருக்கு அங்கு சாப்பிடுவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
அந்த இறைச்சிக் கறிக்குள் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் காணப்பட்டதாகவும், அது குறித்து அங்கிருந்தவர்களிடம் முறைப்பாட்டாளர் கேட்டுள்ளார் என்றும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
‘நீங்கள் உணவினுள் ஆண்மைத்தன்மையை இல்லாமலாக்கும் மலட்டு மருந்தை போடுகிறீர்கள்தானே” என்று கேட்டபோது, ஹோட்டலின் காசாளர் அதை ஏற்றுக் கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட இறைச்சிக் கறிக் கோப்பையை ஹோட்டலின் இரண்டு ஊழியர்கள் – எடுத்துக் கொண்டு ஓடியதாகவும், அவர்களை ஹோட்டலுக்கு வந்திருந்தவர்கள் பிடித்தார்கள் எனவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார் என, பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நியூ காசிம் ஹோட்டல் முதலாளி அந்த அறிக்கையில் சந்தேக நபராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததோடு, நடந்த விடயம் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டத்தின் 03ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனவும், பொலிஸார் சமர்ப்பித்த பி(B) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொலிஸாரின் பி(B) அறிக்கை
அதேவேளை, முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய உணவுகள் உள்ளிட்ட சில பொருட்ககளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் என்றும், அவற்றினை பகுப்பாய்வு செய்யும் பொருட்டு, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்ப அனுமதி வழங்குமாறும், குறித்த அறிக்கையினூடாக பொலிஸார் நீதிமன்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொலிஸார் குறிப்பிட்ட சட்டப் பிரிவு; என்ன சொல்கிறது?
2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்குச் சட்டம் என்பது சுருக்கமாக ‘ஐசிசிபிஆர்’ (ICCPR) என அழைக்கப்படுகிறது.
இந்தச் சட்டத்தின் 03ஆவது பிரிவு ‘ஆளெவரும் போரைப் பரப்புதலாகாது’ எனும் தலைப்பில் விவரிக்கப்படுகிறது.
அதன்படி ‘ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை, எதிர்பு உணர்ச்சியை அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலோ ஆகாது.
மேற்படி தவறை புரிவதற்கு எத்தனிக்கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ்வோராளும் இச்சட்டத்தின் கீழ் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும்.
இப்பிரிவின் கீழ் தவறொன்றைப் புரிந்தமைக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட ஆளொருவர், மேல் நீதிமன்றத்தால் குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன் மீது, பத்து வருடங்களை விஞ்ஞாத காலப்பகுதியொன்றுக்கு கடூழிய மறியல் தண்டனையால் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இப்பிரிவின் கீழான தவறொன்று பிடியாணையின்றி கைது செய்யக்கூடியதும், பிணையில் விடுவிக்கப்பட முடியாததும் ஆதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய தவறொன்றுக்காக சந்தேகிக்கப்பட்ட அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட ஆளெவரும் விதிவிலக்கான சூழ்நிலைகளில், மேல் நீதிமன்றத்தால் தவிர பிணையில் விடுவிக்கப்படுதல் ஆகாது.
இப்பிரிவின் கீழ் தவறொன்றைப் புரிந்தமைக்கு எவரேனும் ஆளுக்கெதிராக, மேல் நீதிமன்றத்திலுள்ள விளக்கமொன்று அந்நீதிமன்றத்தின் வேறு ஏதேனும் அலுவலுக்கு முன்பதாக எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன், நாளாந்த அடிப்படையில் நடைபெறுதலும் வேண்டும். அத்துடன் பதிவுசெய்யப்பட வேண்டிய தவிர்க்க முடியாத எவையேனும் சூழ்நிலைகள் காரணமாக தவிர பிற்போடப்படலாகாது. என, மேற்படி சட்டத்தின் 03ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச ரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அறிக்கை
இந்தப் பின்னணியில், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு காசிம் ஹோட்டலில் பொலிஸார் கைப்பற்றிய சந்தேகத்துக்குரிய 13 வகையான பொருட்களின் மாதிரிகள் மேற்படி சம்பவம் தொடர்பில், அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அவை குறித்து அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திலிருந்து 2018 மார்ச் 07ஆம் திகதியிடப்பட்ட ஒரு அறிக்கையும், 2018 மே 08ஆம் திகதியிடப்பட்ட மற்றொரு அறிக்கையும் அம்பாறை நீதவான் நீதிமன்றுக்கு கிடைத்திருந்தன.
அந்த அறிக்கைகளில், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு இந்த வழக்குத் தொடர்பில் அனுப்பப்பட்ட மாதிரிப் பொருட்கள் மீதான பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை பிரதி
அதில், குழந்தை உருவாகுவதைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளிலுள்ள ‘புரோஜெஸ்டிரோன்’ (Progesterone) மற்றும் ‘லெவனோஜெஸ்ட்ரல்’ (Levenogestrel) ஹோர்மோன்கள், சான்றுப் பொருட்களின் மாதிரிகளில் உள்ளனவா எனப் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் நச்சுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஹோமோன் வகைகள் எவையும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் அனுப்பியிருந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்ப்பு
இந்த நிலையில் வழக்குத் தொடுநரின் (பொலிஸாரின்) விண்ணப்பத்துக்கு இணங்க, மேற்படி பி(B)/5878/2018 இலக்கத்தையுடைய வழக்கானது, கிடப்பில் வைக்கப்படுவதாக 2019 செப்டம்பர் 17ஆம் திகதியன்று அம்பாறை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.
நியூ காசிம் ஹோட்டல் முதலாளிக்கு எதிராக பொலிஸார் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அவரின் ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவில் – மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் எவையும் கலக்கப்படவில்லை என, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதிப்படுத்தியமைக்கு அமைவாகவும், அந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்கான வேறு ஆதாரங்கள் பொலிஸாரிடம் இருக்கவில்லை என்பதனாலும், அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பொலிஸார் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி
தவறான தகவல் மற்றும் வெறுப்பு பிரசாரத்தின் விளைவு
நியூ காசிம் ஹோட்டல் மற்றும் அதன் முதலாளி தொடர்பில் பரப்பப்பட்ட தவறான தகவல் மற்றும் வெறுப்புப் பிரசாரங்களில் எந்தவொரு உண்மையும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ள போதும், அவை ஏற்படுத்திய மோசமான தாக்கங்களிலிருந்து அந்த ஹோட்டல் முதலாளியும், முஸ்லிம் சமூகத்தினரும் இன்னும் முழுவதுமாக மீளவில்லை என்பதுதான் உண்மை நிலைவரமாகும்.
அன்றைய சம்பவத்தின் போது நியூ காசிம் ஹோட்டல் தாக்கப்பட்டமை காரணமாக, தமக்கு 16 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டது என, அதன் முதலாளி பர்சித் தெரிவிக்கின்றார். ஹோட்டலை நடத்திய கட்டட உரிமையாளருக்கு கொடுத்த முற்பணத்தில் பல லட்சம் ரூபாய் இன்னும் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, அன்றைய தினம் தாக்கப்பட்ட, தீயிட்டு கொளுத்தப்பட்ட முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான நஷ்டஈடுகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
நியூ காசிம் ஹோட்டல் மீது தாக்குதல் நடந்த தினத்தில், தமக்கு ஏற்பட்ட அச்சத்திலிருந்து, அம்பாறை நகரில் தொழில் செய்யும் முஸ்லிம்கள் இன்னும் மீளவில்லை.
சிங்கள – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஏற்பட்ட கசப்புகளும் இன்னும் நீங்கி விடவுமில்லை.
பல்லின சமூகங்களிடையே குரோதங்களையும் சண்டைகளையும் ஏற்படுத்துவதற்காக – தவறான தகவல்களும், வெறுப்புப் பிரசாரங்களும் மிகத் திட்டமிட்டுப் பயனப்படுத்தப்படுகின்றன என்பதற்கு, அம்பாறை சம்பவம் குறிப்பிடத்தக்கதோர் உதாரணமாகும்.
(இந்தக் கட்டுரை, புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு, புலனாய்வு அறிக்கையிடலுக்கான நிலையம் – CIR, நடத்திய பயிற்சி நெறியை அடுத்து, அந் நிலையத்தினால் வழங்கப்பட்ட அனுசரணையின் கீழ் எழுதப்பட்டது)
நன்றி: தமிழன் பத்திரிகை (14 நொவம்பர் 2021)