சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த சேதன உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது.
இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த சீன நிறுவனம் நட்டஈடாக 08 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையிடம் கோரியிருந்தது.
இந்தப் பின்னயில் சீன நிறுவனம் கோரிய நட்டஈட்டில் 75 சதவீதத்தை செலுத்தி சர்ச்சையை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது. இது 6.7 மில்லியன் அமெரிக்க டாலராகும்.
மேலும் அதே நிறுவனத்திடம் இருந்து புதிய உரத்தைக் கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ‘சண்டே டைம்ஸிடம்’ தெரிவித்துள்ளார்.
“இந்த பிரச்சினையில் ராஜதந்திர உறவுகளைப் பாதிப்படையச் செய்ய எங்களால் முடியாது,” என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளார் எனவும் குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.