எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பேசும் கட்சிகளிடையே இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,
தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும், இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.
அரசாங்கத்தினாலும் அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படடு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-