கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இன்று (22) முதல் மீண்டும் ஆரம்பமாகின்றன.
மூடப்பட்டிருந்த பாடசாலைகளைப் பல கட்டங்களாக மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதன்படி முதற்கட்டமாக, 200க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அதன்பின்னர், இரண்டாம் கட்டமாக நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு வகுப்புகளும் கடந்த மாதம் 25ஆம் திகதி திறக்கப்பட்டன.
இதனையடுத்து, மூன்றாம் கட்டமாக அனைத்துப் பாடசாலைகளினதும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளுக்கான கல்வி செயற்பாடுகள் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகின.
இந்தநிலையில், இதுவரையில் ஆரம்பிக்கப்படாமலிருந்த 06, 07, 08 மற்றும் 09 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு கடந்த வாரம் தீர்மானித்திருந்தது..
அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக ஆரம்பமாகின்றன.
இதேவேளை, நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர, மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக சந்தேகித்தாலோ அல்லது தொற்றுறுதியானாலோ பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய முறைமைகள் அடங்கிய சுகாதார வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மாணவர் ஒருவர் அல்லது சேவையாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான தனி இடம் ஒன்று பாடசாலைகளில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளின் நுழைவாயிலில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் குறித்துக் கண்காணித்தல் அவசியமாகும்.
மாணவர் ஒருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டால் உடனடியாக பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அறிவிக்க வேண்டும்.
அத்துடன், அந்தப் பகுதிக்குப் பொறுப்பான சுகாதார தரப்பினருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.