“நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில், தாங்க முடியாத அளவுக்கு நாட்டிலிருக்கும் வாழ்க்கைச் செலவை குறைக்க எந்த ஏற்படுகளும் இல்லை. வெறும் அரசியலுக்காகவே இந்த வரவு செலவுத் திட்டம்”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளாா். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றமாக்கியுள்ளது.
நிதி மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு பற்றாக்குறையின் முக்கிய கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்க இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.
முதலீடுகள், ஏற்றுமதிகள், தொழில்நுட்பம் மற்றும் கண்டுப்பிடிப்புகளில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.
தாங்க முடியாத அளவு நாட்டிலுள்ள வாழ்க்கைச் செலவை நிவர்த்தி செய்யக் கூட எந்த ஏற்பாடுகளும் இல்லை. வெறும் அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.