ஞானசார தேரர் அன்மையில் ஹிரு தொலைக்காட்சி “சலகுன” நிகழ்ச்சியில் கூறியபடி நாட்டில் பல இடங்களிலும் குண்டுகள் வெடிக்கலாம் என்பது இன்றைய கேஸ் சிலிண்டரையா சொன்னார்? என்கிற சந்தேகம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.
இன்று நாட்டிலே ஒரு அரசாங்கம் இருக்கின்றதா? நாட்டின் அனைத்து நிர்வாக செயற்பாடுகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தமக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை அதிகூடிய விலைக்கும் பெற்றுக்கொள்ள முடியாமல் ஒரு போராட்டத்தின் மத்தியிலே வாழ்வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது எரிவாயு கேஸ் சிலிண்டர்கள் இரண்டை வாங்கும் விலையில் ஒன்றை பல நாட்கள் தவமிருந்து பல சவால்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்டு வீடு சென்றதும் தற்போது நாட்டில் பல இடங்களில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பல அனர்த்தங்களும், முதலாவது மரணமும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கேஸ் இல்லாமல் வெற்று சிலிண்டருடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது இருந்த அழுத்தத்தையும் விட பல மடங்கு அழுத்தம் தற்போது வீட்டிலே கேஸ் சிலிண்டரை பாவிப்பதிலே இருப்பதாக பலரும் சொல்லிக் கவலைப்படுகின்றனர்.
எனவே ஒரு பொருப்புள்ள அரசாங்கமாக இந்த எரிவாயு பிரச்சினைக்கு என்ன காரணம்? தரத்தில் குறைந்த கேஸ் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதாவது சிக்கல்களின் மூலமா இவ்வாறு நடக்கிறது என்பதனை அவசரமாக அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு மக்களுக்கு கூற வேண்டும். என அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.