Our Feeds


Monday, November 29, 2021

SHAHNI RAMEES

இந்தியா - இலங்கை - மாலைத் தீவுகள் கூட்டு போா் பயிற்சி

 

இந்தியா - இலங்கை - மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போா் பயிற்சியை மாலைத்தீவுகள் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக இந்திய தூதரகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பரஸ்பர செயல்பாட்டுத் திறன் மேம்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த 15 ஆவது முத்தரப்பு போா் பயிற்சியை ‘தோஸ்தி’ என்ற பெயரில் 3 நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொழும்பு பாதுகாப்பு மாநாடு (சிஎஸ்சி) தலைமையின் கீழ் நடைபெறும் இந்த இரண்டு நாள் போா் பயிற்சி, கடல்சாா் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சியை உறுதிப்படுத்தவும், 3 நாடுகளின் கடற்படைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) பின்பற்றுவதை உறுதிப்படத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய கடற்படை சாா்பில் கடலோர ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுபத்ரா, கடல் பகுதியில் நீண்டதூரம் பறந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் பி8ஐ போா் விமானம் ஆகியவை இந்த கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளன. இலங்கை கடற்படை சாா்பில் எஸ்எல்என்எஸ் சுமுதுரா, எம்என்டிஎஃப் டிரோனியா் போா் விமானம் ஆகியவை பங்கேற்றுள்ளன. அதுபோல மாலத்தீவுகளின் போா் கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாலைத்தீவுகளில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘மூன்று நாடுகளிடையேயான நட்புறவு, கடல் பாதுகாப்பில் பரஸ்பர செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், மூன்று நாடுகளின் கடலோர காவல்படைகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த முத்தரப்பு போா் பயிற்சி உதவும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போா் பயிற்சி இந்தியா - மாலைத்தீவுகள் இடையேயான இரு தரப்பு போா் பயிற்சியாகவே முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு போா் பயிற்சி தொடங்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் இலங்கையும் இணைந்ததால், இது முத்தரப்பு போா் பயிற்சியாக மாறியது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »