நாட்டில்ல ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் முடிவற்ற தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் கெனியோன் நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் நேற்று (15) அதிகாலை முதல் 3 அங்குலம் வரை திறந்து விடப்பட்டுள்ளன.
இதேநேரம் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 1 வான் கதவு காலை திறக்கப்பட்டு, பகல் மூடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
தொடர்ச்சி நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக காசல்ரி, மவுசாகலை, லக்ஸபான், விமலசுரேந்திர பொல்பிட்டிய உள்ளிட்ட பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களினதும் வான் கதவுகள் எவ்வேளையிலும் திறக்கப்படலாம் என்பதால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயும் தொடர்ந்து காணப்படுவதனால் மண் மேடுகளுக்கும் மலைகளுக்கும் சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கு வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளன.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-