நினைவு நாள் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி, அம்புலுவாவ விஹாரையை தரிசித்ததுடன், உயிரியல் பன்முக கட்டிடத் தொகுதியையும் பார்வையிட்டார். அதன்பின்னர் தி.மு.ஜயரத்னவின் உருவச் சிலையை திறந்து வைத்து, மலர் அஞ்சலியும் செலுத்தினார்.
கிராம சபையில் இருந்து அரசியலை ஆரம்பித்த தி.மு.ஜயரத்ன, “இலங்கை சுதந்திரக் கட்சியின்” 13ஆவது உறுப்பினர் ஆவார். 1970களில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த அவர், 1994இல் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு வரை பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த தி.மு.ஜயரத்ன, 2010 முதல் 2015 வரை இந்நாட்டின் 14ஆவது பிரதமராகவும் செயற்பட்டார். 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதி அவர் காலமானார். இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்னவினால் நினைவு தினத்தையொட்டி, ஜனாதிபதிக்கு நினைவுப்பரிசு ஒன்றும் கையளிக்கப்பட்டது. அம்புலுவாவ உயிரியல் பன்முக வளாகத்தில் வெள்ளைச் சந்தன மரக்கன்று ஒன்றும் ஜனாதிபதிவினால் நடப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடரும் செல்வி ஷலனி வாசல பண்டாரவினால் எழுதப்பட்ட “மனுஷத்வயே மேஹேயும” நூலும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது. மூன்று நிக்காயாக்களினதும் மஹா சங்கத்தினர், அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மஹிந்தானந்த அலுத்கமகே, ஆளுநர் லலித் யூ.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக ராஜபக்ஷ, உதயன கிரிந்திகொட, அம்புலுவாவ நிர்வாக சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.