இலங்கை தொடர்ந்தும் எதிர்மறையான பாதையில் பயணித்தால் பெரும் விலையை செலுத்தவேண்டியிருக் கும் என்பதை அந்த நாட்டுக்கு உணர்த்தவேண்டும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான தனது ஈடுபாடு குறித்த அணுகுமுறையை சர்வதேச சமூகம் மீள்பரிசீலனை செய்வதற்கான தருணம் இது என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்ந்தும் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் பொறுப்புக்கூறல் அல்லது நல்லிணக்கம் போன்ற எந்த விடயத்திலும் எதிர்மறையான பாதையில் பயணித்தால் அதற்கான விலையை செலுத்தவேண்டியிருக்கும் என்பதை உறுதியாக அது உணரச்செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்கட்டமாக உலகத் தலைவர்கள் குறிப் பாக கண்ணியமான மற்றும் நாகரீக உலகிற்கு சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பது முக்கியமானது என கருதுபவர்கள் சர்வதேச நியமங்களின் அடிப்படைகளை அப்பட்டமாக மீறும் இலங்கை தலைவர்களுடனான ஈடுபாட்டை தவிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை தலைவர்கள் நேர்மையான கண்ணியமான மரியாதையை பெறும் விதத்தில் நடந்துகொள்வது சிறந்தது என தெரிவித்துள்ள சுரேன் சுரேந்திரன் ஞானசாரதேரரின் தலைமை யின் கீழ் ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி உருவாக்கப்பட்டுள்ளமை கவலை தரும் விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.
செயலணியில் தெரிவு செய்யப்பட்ட சில முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள அவர் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
பன்முகத்தன்மைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மரியாதை இன்மை மற்றும் ஆழமாக பதிந்துள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாசாரம் ஆகிய இலங்கையின் இரண்டு தோல்விகளை இது தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் பாரம்பரிய ஜனநாயக ஆட்சி பொறிமுறைகளை தவிர்த்துவிட்டு செயலணிகள் மூலம் ஆட்சி செய்யப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.