ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அச்செயலணியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க விரும்பினால் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் காரியாலயத்திற்கு நேரடியாக வருகை தர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுலில் உள்ள தனியார் சட்டங்களான கண்டிய சட்டம், தேசவலமை சட்டம் என்பவற்றில் அடங்கியுள்ள நல்ல விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு அனைவருக்கும் சமமான முன்னேற்றகரமான சிறந்ததொரு சட்டத்திற்கான பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைக்குமென செயலணியின் தலைவர் ஞானசார தேரர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரசியல்வாதிகள் நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றுபடுவதை விரும்பவில்லை. அதனாலேயே ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியை எதிர்க்கிறார்கள். இந்நாட்டில் முஸ்லிம்களுக்கென்று பல சட்டங்கள் இருப்பதினால் அந்த சட்டங்களை ஒரே சட்டமாக்க நாம் விரும்புகிறோம். செயலணி தனது பொறுப்பினை எவ்வித பாகுபாடுமின்றி நிறைவேற்றும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவையென ஞானசார தேரர் தெரிவித்தார்.