Our Feeds


Wednesday, November 10, 2021

Anonymous

பயணப் பொதியிலிருந்து உடல் மீட்க்கப்பட்ட மாளிகாவத்தை மும்தாஸ் - இரும்பு உலக்கையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

 



(எம்.எப்.எம்.பஸீர்)


மாளிகாவத்தையைச் சேர்ந்த பாத்திமா மும்தாஸ் எனும் இரு பிள்ளைகளின் தாயை உலக்கையால் அடித்துக் கொலை செய்து, சடலத்தை பயணப் பையில் இட்டு, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடம் ஒன்றில் கைவிட்ட சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லம்பிட்டியவில் வைத்து அவரை நேற்று (9) பிற்பகல் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

இதன்போது கொலை செய்யப்பட்ட மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்த மொஹம்மட் ஷாபி பாத்திமா மும்தாஸுக்கு சொந்தமான இரு கையடக்கத் தொலைபேசிகளையும், சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஏற்கனவே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (9) நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட, கணவன் – மனைவியில், மனைவியின் சகோதரரான 34 வயதான மொஹம்மட் நெளஷாட் எனும் சந்தேக நபரே வெல்லம்பிட்டிய – மெகடகொலன்னாவை பகுதியில் மறைந்திருந்தபோது சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கணவன் – மனைவி நேற்று மஹர நீதிவான் கேமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நேற்று ( 9) உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள், கொழும்பு மட்டக்குளியைச் சேர்ந்த மொஹம்மட் சித்தி ரொஷானா (36), சேகு ராஜா கணேஷ் ஆனந்த ராஜா (36) எனும் கணவன் -மனைவியர் ஆவர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, 48 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து இந்த தம்பதியை விசாரித்துள்ள பொலிஸார் பல விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். மனைவியான ரொஷானாவிடம் பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரகாரம், கொலை செய்யப்பட்ட பாத்திமா மும்தாஸ் கொலை செய்யப்படும்போது அணிந்திருந்ததாக கூறப்படும் தங்க சங்கிலி, காதணி ஜோடி, மோதிரம் ஆகியன செட்டியார் தெருவில் தங்க ஆபரண கடை ஒன்றில் உருக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக சப்புகஸ்கந்தை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக அறிவித்தனர்.

இந்த தங்க நகைகளை ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாவுக்கு குறித்த நகைக் கடைக்கு சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பெண் விற்பனை செய்துள்ளதாகவும் இந் நிலையிலேயே உருக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தங்கம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட, கொலையின் பிரதான சந்தேக நபர், இந்த கொலையை முன்னெடுக்க பயன்படுத்தியதாக கூறப்படும் இரும்பினாலான உலக்கை மற்றும் சடலத்தை சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு சென்ற முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்த முச்சக்கர வண்டியானது, சந்தேக நபரன ரொஷானா எனும் பெண்ணின் மாமனாருக்கு சொந்தமானது என பொலிஸார் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்துள்ள தகவல்கள் பிரகாரம்,’ சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள ரொஷானா எனும் பெண், சமிட் புர பகுதியில் ‘ரத்னா மாமி ‘ என அறியப்படும் ஒருவரின் தங்க வலயல்கள் மற்றும் தங்கச் சங்கிலியை பெற்று அதனை 90 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளார்.

அடகு வைத்து பெறப்பட்ட 90 ஆயிரம் ரூபாவில் 50 ஆயிரம் ரூபாவால் கடனை அடைத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, 30 ஆயிரம் ரூபாவை மும்தாஸிடம் சூதாடி தோற்றுள்ளார். இந்நிலையிலேயே அந்த தங்க ஆபரணங்களை மீட்டுத் தருமாறு கூறியே, சந்தேக நபர் ரொஷானா, பாத்திமா மும்தாஸை (உயிரிழந்த பெண்) அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பிரகாரம் மும்தாஸ், சந்தேக நபரன பெண்ணின் கோரிக்கைக்கு அமைய, குறித்த அடகுக் கடைக்கு சென்று தங்க ஆபரணங்களை மீட்டு, மேலும் 30 ஆயிரம் ரூபாவை சந்தேக நபரான ரொஷானாவுக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 23 ஆம் திகதி, சந்தேக நபரான ரொஷானா, மும்தாஸின் வீட்டில் சூது விளையாடி ஒரு இலட்சத்து 12 ஆயிரம் ரூபாவை வென்றுள்ளார். இந்நிலையில் அப்பணத்தில் ஒரு இலட்சம் ரூபாவை மும்தாஸிடம் கொடுத்துள்ள சந்தேக நபரான ரொஷானா, ‘ரத்னா மாமி’ யின் தங்க நகைகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.

இந்நிலையில், அந்த தங்க நகைகளை அடகிலிருந்து மீட்டது, மீள ஒப்படைப்பதற்காக அல்ல எனவும், அவற்றை மீண்டும் எவருக்கும் வழங்கப் போவதில்லை எனவும் மும்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையிலேயே பிரச்சினை இருவருக்கும் இடையே தோன்றியுள்ளதாக விசாரணைகளில் வெளிப்பட்டதாக சப்புகஸ்கந்த பொலிஸார் நீதிமன்றுக்கு அளித்துள்ள மேலதிக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் பிரகாரம், ‘ ரத்னா மாமி’ தனது தங்க நகைகளை மீள கோரி வந்த நிலையில், ரொஷானா விடயத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மும்தாஸை அச்சுறுத்தி அந்த தங்க நகைகளை பெற முதலில், ரொஷானாவும் பிரதான சந்தேக நபரான அவரது சகோதரரும் , மும்தாஸின் வீட்டுக்கு சென்றுள்ளனர். எனினும் அப்போதும் மும்தாஸின் வீட்டின் வேறு இருவர் இருந்தமையால், மும்தாஸை ஏமாற்றி மட்டக்குளி , சமிட்புரவில் உள்ள தமது வீட்டுக்கு அழைத்து வந்து இந்த கொலையை புரிந்துள்ளதாக விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கொலை செய்த பின்னர், கொல்லப்பட்ட மும்தாஸ் அணிந்திருந்த ‘ ரத்னா மாமி’ யின் நகைகளை கழற்றி, தான் அடகிலிருந்து அவற்றை மீட்டதாக கூறி அவரிடமே ரொஷானா ஒப்படைத்துள்ளதுடன், ஏனைய நகைகளை விற்பனை செய்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையிலேயே கொலை செய்யப்பட்ட மும்தாஸின் சடலத்தை, தனது கணவரின் துணையுடன் ரொஷானா, பிரதான சந்தேக நபரான சகோதரருடன் சேர்ந்து வீட்டிலிருந்த பயணப் பையில் இட்டு சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு வந்து கைவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

முதலில் சமிட்புரவிலிருந்து மேலும் சில பழைய பொருட்களுடன் சடலம் இடப்பட்ட பயணப் பையை வெல்லம்பிட்டிய பகுதிக்கு எடுத்து வந்து, அங்கிருந்தே பிரதான சந்தேக நபர் செலுத்தி வந்த முச்சக்கர் வண்டிக்கு மாற்றி சப்புகஸ்கந்த பகுதிக்கு கொண்டு சென்று கைவிட்டுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கைதாகியுள்ள பிரதான சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயசின் ஆலோசனை பிரகாரம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் அர்ஜுன மாஹிங்கந்தவின் வழி நடத்தலில், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கீர்த்திரத்ன, பொலிஸ் பரிசோதகர் ரொமேஷ் ரத்நாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் தெஹிதெனிய, ஆகியோருடன் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிர்தான பொலிச் பரிசோதகர் துமிந்த குலசேகர, பொலிஸ் பரிசோதகர் எல். அமரசேகர உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »