புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம் ஜயபிம பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று நேற்று (12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்று வீட்டை சோதனை செய்து பார்த்த போது தூக்கிலிட்டவாறு அழுகிய நிலையில் பெண்ணொருவர் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மாதம்பை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மனைவியாக இருக்கலாமென புத்தளம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண், மூன்று வாரங்களுக்கு முன்னர் குறித்த வீட்டிற்கு வாடகைக்கு வந்ததாகவும், இந்நிலையில் நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம் இக்பால், சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை நடத்தினார்.
அத்துடன், குறித்த பெண்ணோடு தொடர்பிலிருந்தவரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.