” புதிய அரசியலமைப்பை இயற்றும் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்
ஊடாகவே அதற்கான பயணிகள் இடம்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புதிய அரசமைப்பையும் மீளப்பெறவேண்டிய நிலைமை அரசுக்கு ஏற்படும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி. தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத் திட்டத்தின் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படும்பட்சத்தின் அதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு பற்றி கருத்துகள் வெளிவந்தாலும் அதனை நாம் கண்டதில்லை.
புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியானது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும். சோல்பரியாப்பு, ஶ்ரீமா அம்மையாரால் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்பு, ஜேஆரால் முன்வைக்கப்பட்ட புதிய அரசமைப்பு ஆகியவற்றுக்கான பணிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தற்போது என்ன நடக்கின்றது, ஜனாதிபதிக்காக வழக்குகளை வாதாடியவர்களை நியமித்து அரசியமைப்பை தயாரிப்பது சரியா, இந்த வழிமுறையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் அதையும் மீளப்பெற வேண்டிய நிலையே அரசுக்கு ஏற்படும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நிபுணர் குழுவானது எமது கருத்துகளை கோரி கடிதம் அனுப்பியிருந்தது. 13 ஆவது திருத்தச்சட்டத்தைதவிர ஏனைய விடயங்கள் பற்றி கதைக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியான குழு எப்படி அரசமைப்பை தயாரிக்கும்” – என்றார்.