இலங்கையில் இராணுவத்தளங்களையும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டுவருவதாக அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன்கிழமை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் மேற்படி அறிக்கையில் சீனா அதன் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளின் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் மேலதிக இராணுவத்தளங்களை ஸ்தாபிப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதற்கு விரும்புவதுடன் அதுகுறித்து ஏற்கனவே திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா. பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனா அதன் இராணுவத்தளங்களையோ அல்லது இராணுவ ரீதியான உட்கட்டமைப்பு வசதிகளையோ நிறுவுவதற்குத் சீனா எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை நமீபியாவில் சீனா அதன் படைத்தளங்களை நிறுவும் பணிகளை ஏற்கவே ஆரம்பித்திருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் இதில் ஆபிரிக்கா மற்றும் பசுபிக் தீவுகளும் இலக்குவைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளிலும் சீனா அதன் இராணுவப்படைத்தளங்களையும் அதுசார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ள போதிலும், சில நாடுகள் மாத்திரமே அதுகுறித்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதற்கும் ஒப்பந்த அடிப்படையிலான இணக்கப்பாட்டிற்கு வருவதற்கும் முன்வரக்கூடும் என்றும் பென்டகனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
மேற்குறிப்பிட்டவாறு உலகநாடுகள் பலவற்றிலும் சீனாவின் இராணுவத்தளங்கள் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான திட்டங்களை வகுப்பதிலும் அதுகுறித்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழு மற்றும் அதனுடன் இணைந்த ஊழியர் திணைக்களம், மத்திய இராணுவ ஆணைக்குழுவின்கீழ் இயங்கும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.