வெளிநாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகளுக்காக விமான நிலையங்களில் நடத்தப்படும் கொவிட் PCR பரிசோதனைகள்
தற்போது முன்னெடுக்கப்படுவதில்லை என சுகாதார தொழில் நிபுணர் சங்கம் தெரிவிக்கின்றது.இதனால், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவும் ஒமிக்ரோன் வைரஸ் புறழ்வானது, நாட்டிற்குள் இலகுவாக பரவும் அதிவுயர் அபாயம் காணப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.
ஒமிக்ரோன் வைரஸ் புறழ்வு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட தவறும் பட்சத்தில், பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
ஏனைய நாடுகளில் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றமையினாலேயே, ஒமிக்ரோன் வைரஸ் புறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், இலங்கையின் சுகாதார தரப்பை போன்று, பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் பல நாடுகள் இருக்கக்கூடும் எனவும், அந்த நாடுகளிலிருந்து இந்த வைரஸ் இலங்கைக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
டெல்டா வைரஸ் புறழ்வு பரவும் போதும், தாம் எச்சரிக்கை விடுத்ததாக கூறிய அவர், இறுதியாக டெல்டா கொத்தணி உருவாகியதாக குறிப்பிடுகின்றார்.
அதனால், கடும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என ரவி குமுதேஷ் தெரிவிக்கின்றார்.