தமது களஞ்சியசாலையில் 12 முதல் 20 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன மொத்த களஞ்சியசாலை நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவிக்கின்றார்.
தேவை ஏற்படும் பட்சத்தில், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை நாட்டிற்கு இறக்குமதி செய்து, விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
மசகு எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட விலை மனுக்கோரலுக்கு, விநியோகத்தர்கள் முன்வராமையை அடுத்தே, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கான நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மிக வேகமாக அதிகரித்து வருகின்றமையினால், ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் பெற்றோலிய கூட்டுதாபனம் எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி ஆகிய பிரச்சினைகளும் இதற்கான காரணம் என அவர் கூறுகின்றார்.
அதேவேளை, மண்ணெண்ணை தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அதனை உடனடியாக இறக்குமதி செய்து, மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.