இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாஸஸ் மென்பொருள் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளை இரகசியமாக ககானித்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பதிவாகியிருந்தது.
இதில் ஏண்டிறோய்ட் தொலைபேசிகள் மட்டுமின்றி, அப்பிள் தொலைபேசி பயனாளிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், என்.எஸ்.ஓ நிறுவனம் மீது கெலிபோர்னியா நீதிமன்றத்தில் அப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில் ஸ்பைவேர் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்ற புதிய விவரங்களை தாக்கல் செய்து உள்ளதாகவும் அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டளர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகளின் தொலைபேசிகளை இரகசியமாக கண்காணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் பயனாளிகள் ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மென்பொருட்களை முழுமையாக தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
100 கோடிக்கும் அதிகமான ஐபோன்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் இது போன்ற சைபர் தாக்குதலை மிகுந்த அக்கறையுடன் எதிர்கொண்டு பாதுகாப்பு மற்றும் தனி உரிமை கொள்கைகளை பலப்படுத்த உள்ளதாகவும் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.