இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட் வசம் கொடுத்துள்ளனர். நாளை புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.
அதற்கு முன்னதாக காங்கிரஸ் பிரதேச கமிட்டி கூட்டம் நாளை (21/11/2021) நடக்க உள்ளதாம். அதில் மேற்கொள்ளப்படும் விவாதத்தின் அடிப்படையில் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த அறிவுப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. அண்மையில் முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.