ஞானசார தேரரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணிக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டமைக்கு அக்கட்சி மறுப்புத் தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரானவர். இஸ்லாத்திற்கு எதிரானவர். அல்லாஹ்வை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக சித்தரித்தவர். அவதூராக பேசியவர் இவருடைய தலைமையிலான ஜனாதிபதி செயலணி நடுநிலையானதாக இருக்க முடியாது. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு இனவாதியான ஞானசார தேரரினால் எப்படி ஆலோசனை வழங்க முடியும்? இந்த நியமனத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னால் பொதுச் செயலாளருமான எம்.டி ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணிக்கு ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் அச்செயலணியில் முஸ்லிம்கள் எவரும் பங்குகொள்ள முடியாது. உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான எமது கட்சியை சேர்ந்த கலீலுர் ரஹ்மானிடம் இது தொடர்பில் நாம் வினவினோம்.
தான் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டமை அவருக்கே தெரியாது என அவர் பதிலளித்தார்.
ஞானசாரரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளன. அவர் முஸ்லிம் சமூகத்தை எதிர்ப்பவர். முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழக்கூடாது அரபு நாட்டுக்கு சென்று விட வேண்டும் என கடந்த காலங்களில் சவால் விட்டவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மாத்திரமன்றி, அல்லாஹ்வையும் நிந்தித்தவர். இவ்வாரான ஒருவர் நிச்சயமாக முஸ்லிம்களுக்கு எதிராகவே செயலணியிலும் செயல்படுவார்.
ஜனாதிபதி ஞானசாரரின் தலைமையில் குறித்த செயலணியை அமைத்ததின் மூலம் - குறிப்பாக முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நியமனம் நகைப்புக்குறியதாகும். இவ்வாரான நியமனம் மூலம் முஸ்லிம் சமூகம் பழிவாங்கப்பட்டுள்ளது.
இச்செயலணிக்கு எமது கட்சி உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் ஹஸன் அலி மேலும் தெரிவித்துள்ளார்.