ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சந்தேகநபர் தொடர்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியின் மீது குண்டு வீசுவதாக குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக நபர் ஒருவர் கடிதம் ஒன்றை வைத்து சென்றதாக எதிர்க்கட்சித் தலைவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியினால் கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.