(எம்.மனோசித்ரா)
நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கிறோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதும் நாளாந்தம் சுமார் 500ஐ அண்மித்தளவில் கொவிட் -19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் நாம் இன்னும் அபாய கட்டத்திலேயே இருக்கிறோம் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமைக்கு மத்தியில் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமும் மந்தமடைந்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவங்கள் , மரண சடங்குகள் , உற்சவங்கள் , மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.
எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றார்.