பொய் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதும் மீளப் பெறப்படுவதும் சாதாரணமானது. அந்த வகையிலே அமைச்சர்களுக்கு எதிரான
வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. யாரும் அவற்றில் தலையீடு செய்யவில்லையென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.அமைச்சர்களுக்கெதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்பில் எதிரணி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சியில் மோசடி தடுப்பு பிரிவு என ஒன்றை நியமித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளையும் சேர்த்துக் கொண்டு தெரிவு செய்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
அதற்கென நீதிமன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சட்டங்களும் திருத்தப்பட்டன. அவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளில் ஆதாரங்களுக்கு அடிப்படையாக அன்றி நபர்களின் அடிப்படையிலே தொடரப்பட்டன.
அவை கடந்த ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்பட்டிருந்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, காமினி செனரத் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் கடந்த ஆட்சியிலே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன.
அவற்றுக்கு யாரும் தலையீடு செய்தார்களா? காமினி செனரத்தின் வழக்கில் நான் ஆஜரானேன். அவர்கள் ஐந்து சதம் கூட பெற்றது கிடையாது.
இவ்வாறான பொய் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதும் மீளப் பெறப்படுவதும் சாதாரணமானது. எந்த வழக்கிலும் குற்றச்சாட்டு கிடையாது.
மோசடி செய்ததாக ஆதாரம் கிடையாது. தினமும் வழக்கு விசாரித்து தள்ளுபடி செய்யப்படுவதை விட வாபஸ் பெறுவது நல்லது என சட்டமா அதிபர் கருதியிருக்கலாம் என்றார்.