Our Feeds


Friday, November 26, 2021

ShortNews Admin

நாடாளுமன்ற விவாதத்தின்போது தாய்ப்பால் கொடுத்த எம்.பிக்கு எதிர்ப்பு



பிரித்தானிய நாடாளுமன்ற விவாதத்தின்போது, எம்.பி. ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், விவாதத்தின்போது தூங்கும் குழந்தையை அழைத்து வந்ததற்கு நாடாளுமன்ற அலுவலர் ஒருவர் அந்த எம்.பியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 23ம் திகதி நடைபெற்ற விவாதத்திற்கு, தன்னுடைய மூன்று வயது குழந்தை பீப்பை தொழிலாளர் கட்சி எம்பி ஸ்டெல்லா க்ரீஸி அழைத்து வந்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மகப்பேறு சலுகைகளை அளிக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் க்ரீஸி. இதனிடையே, எம்பியை அலுவலர் எச்சரித்ததற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக, நாடாளுமன்ற கீழ் சபை அலுவலர் ஒருவர், “குழந்தையுடன் இருக்கும் போது அறையில் உங்கள் இருக்கையில் அமரக்கூடாது” என க்ரீஸிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதை, ட்விட்டரில் பகிர்ந்த அவர், “நாடாளுமன்றங்களின் தாயகத்தில் தாய்மார்கள் இருக்கக் கூடாது. பேச கூடாது போலும்” என பதிவிட்டார்.


க்ரீஸி நடத்தப்பட்ட விதத்திற்கு பல்வேறு கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், விதிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீரற்ற முறையில் அலுவலர்கள் விதிகளை விதித்து வருகின்றனர் என முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.


அலுவலரின் செயல் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என கீழ் சபை சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சபையின் பணியில் முழுமையாக பங்கேற்பது மிகவும் முக்கியமானது” என்றார். இதற்கு கிரீஸியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் மனைவி கேரிக்கு இரண்டாம் குழந்தை பிறக்கவுள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத்தில் மகப்பேறு தொடர்பான சீர்திருத்தங்களுக்கு கேரி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், இது குறித்து முடிவை கீழ் சபையால்தான் எடுக்க முடியும் என கூறப்படுகிறது.


இதுகுறித்து கீழ் சபை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “எந்தவொரு சூழ்நிலையிலும் பணியிடமானது நவீனமாகவும் நெகிழ்வாகவும் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »