(எம்.மனோசித்ரா)
நேற்று (03) செவ்வாய்க்கிழமை பத்தேகம நகரத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி வாங்குவதற்காக சென்ற ஒருவருக்கும் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த நபர் வீட்டுக்குச் சென்று கத்தி ஒன்றுடன் வந்து ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கியுள்ளார்.
இதனைப் பார்த்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் தனது தந்தையை தாக்கிய நபரை பொல்லால் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் 26 வயதுடைய கொடகொட , பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த நபரால் தாக்குதலுக்கு உள்ளான ஹோட்டல் உரிமையாளர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளரின் மகனான 25 வயதுடையவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.