Our Feeds


Thursday, November 25, 2021

SHAHNI RAMEES

வீடுகளில் பாவிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் அபாயம் | முஜுபுர் ரஹுமான்

 

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

வீடுகளில் பாவிக்கும் சமையல் எரிவாயுவின் அளவில் மாற்றம் செய்துள்ளதால் அது வெடிக்கும் அபாயம் இருப்பதாக நுகர்வோர் விவகார நடவடிக்கைகள்

அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்ற போதும் அதுதொடர்பில் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. 

அதனால் எரிவாயு சிலிண்டர் வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பிர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தியதனால் ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாக பதவி விலகிய  நுகர்வோர் விவகார நடவடிக்கைகள் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்த்தன சமூக வலைத்தலத்தில் பதிவொன்றை வைத்திருக்கின்றார். அதாவது, LP. 12.5 கேஸ் சிலிண்டரில் கலவை செய்யவேண்டிய அளவில் மாற்றம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

கேஸ் சிலிண்டரில் இருக்கவேண்டிய பிரபோனின் அளவு 20வீதமும் டீடன் அளவு 80வீதமுமாகும்.

ஆனால் இன்று அந்த கேஸ் சிலிண்டரில் இருக்க வேண்டிய கலப்படத்தின் அளவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. பிரபோன் மற்றும் டீடன் 50வீதமாக செய்திருக்கின்றது. இவ்வாறு செய்வதன் மூலம் நுகர்வோர் சூறையாடப்படுகின்றனர். 

இந்த நடவடிக்கையால் கேஸ் விரைவாக தீர்ந்துவிடும். 30 நாட்களுக்கு பாவிக்கும்  கேஸ் சிலிண்டரை 20 நாட்களுக்கே பாவிக்க முடியுமாகின்றது என துஷான் குணவர்த்தன குறிப்பிட்டிருக்கின்றார். இது பாரிய கொள்ளையாகும்.

அதுமாத்திரமல்ல, அவர் தெரிவித்திருக்கும் பயங்கரமான செய்திதான், கேஸ் சிலிண்டரில் பிரபோனின் அளவு அதிகம் என்பதால் கேஸ் கசிந்து குண்டுபோல் வெடிக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரேஸ்கோசில் காஸ் கசிந்து வெடிப்பு ஏற்பட்டது. 

வெலிகமவில் கேஸ் வெடித்தது. இவ்வாறு கேஸ் சிலிண்டர் வெடித்த செய்திகளை கடந்த சில தினங்களாக ஊடகங்கள் ஊடாக கேள்விப்பட்டு வருகின்றோம்.

மேலும் இந்த அபாயகரமான ஆபத்து தொடர்பாக துஷான் குணவர்த்தன ஜூலை மாதம் அமைச்சர் பந்துல குணவர்த்தன மற்றும் இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதிக்கும் இதுதொடர்பாக அறிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் எமது அனைவரது வீடுகளிலும் வெடிக்கும் குண்டுகளுடனே வாழவேண்டி இருக்கின்றது. 

எனவே எதிர்காலத்தில் கேஸ் வெடித்து உயிரிழப்புகள் இடம்பெற்றால் அந்த உயிர்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »