தொடர்ந்து பொழியும் அடை மழை காரணமாக கண்டி உட்பட மலை நாட்டுப் பகுதிகளில் கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். என அக்குரணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவித்து வந்தனர். அதன் வீரியம் தற்பொழுது குறையும் இச்சந்தர்ப்பத்தில் தொடர்ந்து பொழிகின்ற அடைமழை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையானது உண்மையில் வருத்தத்துக்குரியது.
இந்த தொடர் மழையின் காரணமாக ஏற்படுகின்ற நேரடி தாக்கங்களை போலவே டெங்கு காய்ச்சலும் மலை நாட்டுப் பகுதிகளில் அதிகளவில் பரவி வருவதாக சுகாதார திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் முகமாக வீட்டுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சிரமதானங்களை மேற்கொள்ளுதல், நுளம்பு பரவக்கூடிய இடங்களை கண்டு அழித்தல் போன்ற செயற்பாடுகளை நாம் செய்ய வேண்டி இருக்கிறது. இதுதவிர நோய் அறிகுறிகள் தென்படுமிடத்து உடனடியாக சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் செயற்பட நாம் பின் நிற்கக்கூடாது. இது தொடர்பில் நாம் அனைவரும் வெகுவாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்.
எதிர்வரும் நாட்களில் இந்த டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் பிராந்தியத்தில் பல வேலைத் திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்து இருக்கிறோம். அதற்கும் உங்கள் பூரண ஒத்துழைப்புக்களை தந்துதவுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
இந்த டெங்கு பரவலில் இருந்து நாம் எம்மையும் எமது சூழ இருப்பவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்போம். என இஸ்திஹார் இமாதுத்தீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.