”வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று (16) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மேலும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தின் அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்பது தெளிவாகிறது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவு, அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் கருத்து வௌியிடும் மற்றும் ஒன்றுகூடல் தொடர்பான அடிப்படை உரிமையை பாரதூரமாக மீறும் செயலாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் துறை கோரிய தடை உத்தரவுகள் பல நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்,பொலிஸ் மா அதிபரின் உத்தரவு நீதிமன்ற உத்தரவையும் தாண்டிய ஒன்றாக உள்ளது. கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் பிரதேச மட்டத்தில் வீதித் தடைகளை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தாத பொலிஸ் மா அதிபரால் தற்போது, இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவது முற்றிலும் அரசியல் தேவை கருதியதாகும்.
அத்துடன் வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பெயர்ப் பட்டியலைத் தொகுப்பது, புகைப்படங்களை எடுப்பது என்று தனிமனிதரின் சுயாதீனத்திற்கு கூட சவால் விடுக்கும் அளவிற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதோடு, அந்த உத்தரவுகளின்படி செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.