இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் அச்சமூட்டுவதுடன், படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50% ஆல் உயர்ந்துள்ளதையும் காணமுடிகிறது.
அறிக்கையின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 34 வீதமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளனர்என்றும் அவர்களில் 24 வீதமானவர்கள் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் 20 வீதமானவர்கள் இன்னும் நாட்டை விட்டு வெளியேறும் முறைகளைப் பின்பற்றுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நாட்டில் 22% பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதுடன், அவர்களில் 22 சதவீதமானோர் அவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நாட்டில் 12 வீதமான பெண்கள் இன்னும் அதே முறைகளைப் பின்பற்றுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
மேலும் அவர்களில் 20% பேர் இதற்காகத் திட்டமிடுவதுடன், மேலும் 29% பேர் அதற்கான படிமுறைகளை பின்பற்றுகின்றனர் என அறியமுடிகிறது. கடந்த 3 – 5 வருடங்களில் இலங்கையர்கள் மத்தியில் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சராசரியாக க.பொ.த உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு 2.6% ஆக உள்ளது, அதே சமயம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் தொகை 10.2 % ஆக உள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் (IHP) இந்த ஆய்வுகளுக்கு, இலங்கை கருத்து கண்காணிப்பு ஆய்வு (SLOTS) முறையைப் பயன்படுத்தியது.
கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து நாடு மீண்டு வருவதால், பொதுமக்களின் கருத்தை மதிப்பிடுவதற்கு இந்தக் கணக்கெடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்த கருத்தை இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து சரியானது எனக் கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை, கொவிட்-19 ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தி, விரக்தி என்பவற்றை முக்கிய ஆதாரங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என எதிர்பார்ப்பதாக கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
இது தொடர்பில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கருத்து கணிப்பு தொடர்பில் விசேட பயிற்சிபெற்ற, துறைசார் நிபுணரான கலாநிதி ரவி ரன்னன் எலிய கூறுகையில், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த கொள்கைகளில் அவ்வப்போது மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதனால் அரசாங்கத்தின் மீதான ஆதரவும் நம்பிக்கையும் பாரியளவில் இல்லாது போயுள்ளது.
கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் அதிகமாக செயற்பட வேண்டும் என்று பல அரசாங்க சார்பு வாக்காளர்கள் இன்னும் நம்புகின்றனர் என்றார்.