வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்து எதிர்ப்புப் பேரணி நிடைவடைந்துள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்த மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்து கொள்ளுபிட்டி சந்தியை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பேரணியை நிறைவு செய்ததோடு, குறித்த பேரணியின் நிறைவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைத்து அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.
சீனி, சமையல் எரிவாயு, பால்மா போன்ற அனைத்திற்கும் மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், இதுவரை மூடப்படாத சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் இன்று மூடும் நிலைக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இன்று (16) முற்பகல் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பிலுள்ள பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியினால் போராட்டம் முன்னெடுக்கப்படுமானால், அதனை சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.