Our Feeds


Monday, November 8, 2021

Anonymous

என் மனைவி மலசலகூட தண்ணீரில் தான் நோன்பு திறந்தார் - ரிஷாத் பதியுத்தீன் கவலை VIDEO

 



என் மனைவியை கைது செய்த நேரம் நோன்பு திறப்பதற்கு கூட வாய்ப்பளிக்க வில்லை. மலசலகூடத்தில் கழுவுவதற்கு வைத்த தண்ணீரில் தான் என் மனைவி நோன்பு திறந்தார். 

எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏற்பட்ட அநியாயம் இனிவரும் காலங்களின் சிறுபான்மை சமூகத்தின் எந்தவொரு தலைமைக்கும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் வந்துவிடக் கூடாது என்பதை பிரார்த்தனையில் கேட்டுக் கொண்டேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் ஆறு மாத கால சிறைப்படுத்தலின் பின்னர் நாடளாவிய ரீதியில் தனது ஆதரவாளர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரை சந்தித்து வரும் நிலையில் ஓட்டமாவடியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியில் இல்லத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெற்ற போது இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு இனவாதியாக கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்பட்ட பொழுது எங்களை பல சந்தேக பார்வையோடு காட்டுவதற்கான பல சதிகளை பல ஊடகங்கள் திட்டமிட்டு செய்தது. குண்டு வெடித்த தினத்தில் இருந்து சில ஊடகங்கள் குண்டு தாக்குதலோடு எங்களை சம்பந்தப்படுத்தி பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்ததை நாட்டு மக்கள் அறிவார்கள்.

எந்த பயங்கரவாதத்தோடும் அனுவலவும் சம்பந்தமில்லாதவர்கள் நாங்கள். இந்த விடயத்தினை தெளிவாக சொன்னோம். கடந்த நல்லாட்சியில் விசாரணை நடந்த பொழுது அமைச்சு பதவியை விலகுமாறு அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருக்க அவர் மரணித்து விடுவார் விலகுங்கள் என்று பல அழுத்தங்கள் கொடுக்க அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகி நியாயமான விசாரணைக்கு வழி கொடுத்தோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்த பொழுது என்னை மூன்று முறை அழைத்து புலனாய்வினர் விசாரித்தார்கள். ஆனால் உண்மையான பதிலை வழங்கிய பொழுதும் சாதாரண நபருக்கு நடக்கூடாத அளவுக்கு அநீதி இழைக்கப்பட்டவனாக எனது மனைவி, பிள்ளைகள் உறங்கிய அறைக்குள் பலவந்தமாக வந்தார்கள். எனது கதவு மூடிக் காணப்பட்ட நிலையில் மதிலால் பாய்ந்து உள்ளே வந்தார்கள்.

ஒரு பெரிய மாபியா தலைவரை கைது செய்வது போன்று நடந்து கொண்டார்கள். அதன் பின்னர் ஆறு மாதம் சிறையில் இருந்தேன். இந்த நிலைமை யாருக்கும் நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக கடந்த காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு கீழே கைது செய்த வரலாறு கிடையாது.

பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது மிகவும் ஆபத்தான சட்டம் இந்த சட்டத்தினை நீங்குமாறு உலகமே பேசிக் கொண்டிருக்கின்றது. ஜீ.எஸ்.பி பிளஸ்ஸை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான மோசமான சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டேன்.

எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், பாதுகாப்பு, இருப்பு, காணி பிரச்சினைகள் போன்று பல பிரச்சனைகள் இருக்கின்றது. இவற்றுக்காகத்தான் நாங்கள் அரசியல் செய்கின்றோம் என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »