இலங்கை உள்ளடங்கலாக உலகநாடுகள் பலவற்றிலும் சீனா அதன் இராணுவப்படைத்தளங்களை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துத் தொடர்பில் பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், 'திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றார்' என்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இராணுவத்தளங்களையும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறுவுவதற்கு சீனா திட்டமிட்டுவருவதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்து சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அவ்வறிக்கையில் சீனா அதன் இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படைகளில் பலத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் இராணுவத்தளங்களையும் அதற்கேற்றவாறான உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குவதற்கு விரும்புவதுடன் அதுகுறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனா அதன் இராணுவத்தளங்களையோ அல்லது இராணுவ ரீதியான உட்கட்டமைப்பு வசதிகளையோ நிறுவுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் 'இலங்கையில் இராணுவத்தளத்தை நிறுவுவதற்கு சீனா திட்டமிடுகின்றதா?' என்ற கேள்வியுடன் அமெரிக்கப் பாதுகாப்பு இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையை நேற்றைய தினம் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அவரது அப்பதிவை மேற்கோள்காட்டி இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
'திருடன் ஒருவன், அனைவரும் திருடுவார்கள் என்றே நம்புகின்றான்' அப்பதிவில் தெரிவித்துள்ள சீனத்தூதரகம், ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டிருந்த இராணுவத்தளத்தையும் படையினரையும் அமெரிக்கா நீக்கிக்கொண்டிருந்தாலும் இன்னமும் வெளிநாடுகளில் சுமார் 750 அமெரிக்கப்படைத்தளங்கள் தொடர்ந்து இயங்கிவருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு இந்தப் படைத்தளங்கள் நிதியியல், அரசியல், சமூகவியல் மற்றும் சூழலியல் ரீதியில் மிகுந்த 'பெறுமதிவாய்ந்தவை' ஆகும் என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தரவுகளின் பிரகாரம் வெளிநாடுகளில் அமெரிக்காவினால் படைத்தளங்கள் நிறுவப்பட்டிருக்கும் இடங்கள் அடங்கிய உலக வரைபடமொன்றையும் சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.