டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கி இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக, மத்திய வங்கி ஆளுநர்
அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.நிதி கொள்கை தீர்மானங்கள் குறித்து தெளிவுப்படுத்துவதற்காக (25ம் திகதி) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்த செய்திகளை நேற்றைய (25ம் திகதி) பத்திரிகைகளில் காணக்;கூடியதாக இருந்ததாகவும், இது தொடர்பாக தான் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியதாகவும், ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்படி, டொலர் காரணத்தினால் கொள்கலன் துறைமுகத்தில் இருப்பின், அதுதொடர்பாக உடனடியாக மத்திய வங்கிக்கு அறிவிக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
அவ்வாறான நெருக்கடியொன்று ஏற்பட மத்திய வங்கி ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை தற்போது பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெளிநாட்டு கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்துவது தொடர்பில் எந்தவித அச்சத்தையும் கொள்ள தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை. இதற்கான விடயங்களையும் அவர் இதன்போது தெளிவுப்படுத்தினார்.